Last Updated:
லலித் மோடி, ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் கன்னத்தில் அடித்த வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை ஹர்பஜன்சிங் கன்னத்தில் அடித்த வீடியோவை ஐபிஎல் முன்னாள் நிர்வாகி லலித் மோடி சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகி உள்ள நிலையில், லலித் மோடியை சுயநலவாதி என்று ஹர்பஜன் சிங் கடுமையாக கண்டித்துப் பேசியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்போது மும்பை அணியில் ஹர்பஜன்சிங்கும், பஞ்சாப் அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்தும் விளையாடினர். போட்டி முடிந்த பின்பு கோபத்துடன் காணப்பட்ட ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் பளார் என்று அறை விட்டார். இந்தக் காட்சி அப்போது வெளியாகவில்லை.
ஆனால் ஸ்ரீசாந்த் கன்னத்தில் கை வைத்து தேம்பித் தேம்பி அழுத காட்சிகள் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஐபிஎல் முன்னாள் கமிஷனர் லலித் மோடி, ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் கன்னத்தில் அடித்த வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து ஸ்ரீசாந்தின் மனைவி லலித் மோடியை கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார். அதற்கு பதில் அளித்த லலித் மோடி, என்னிடம் அந்த விஷயம் பற்றி கேட்டார்கள். அதனால் தான் நான் வீடியோவை வெளியிட்டேன். இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டது ஸ்ரீசாந்த் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் வைரல் வீடியோ குறித்து ஹர்பஜன் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: 18 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சம்பவம் நடந்தது. அது பற்றிய வீடியோவை இன்றைக்கு வெளியிட வேண்டிய அவசியமே இல்லை.
லலித் மோடி சுயநல நோக்கத்தோடு இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கலாம். 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை மக்கள் மறந்து விட்டார்கள். அன்றைக்கு நடந்ததற்கு நான்தான் காரணம். அதற்காக நான் பல தடவை ஸ்ரீசாந்திடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். மனிதர்கள் தவறு செய்வார்கள். அது போல் நானும் தவறு செய்தேன். கடவுள் நான் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என்று பலமுறை கேட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
September 01, 2025 1:42 PM IST


