Last Updated:
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.
தமிழ்நாட்டு பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வப்போது வெளிநாடுகளிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, அதில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொழிலதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார்.
அந்த வகையில், இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதலமைச்சர், மேற்கொண்டுள்ள நிலையில் 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டுகளை ஈர்க்க முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மன் பயணத்தை முடித்த முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதனிடையே லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்தும் சர்வதேச கருத்தரங்கிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படிருக்கிறார். இதையடுத்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உள்ள புனித ஆண்டனிஸ் கல்லூரிக்கு இன்று செல்கிறார்.
உயர்அதிகாரிகளுடன் கலந்துரையாடும் முதலமைச்சர், பெரியாரின் மரபு மற்றும் திராவிட சிந்தனையின் ஆழமான தாக்கம் குறித்து சிறப்புரையாற்றுகிறார். மேலும், தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். ‘தி திராவிடியன் பாத்வே’, ‘தி கேம்பிரிட்ஜ் கம்பானியன் டூ பெரியார்’ ஆகிய நூல்களை முதலமைச்சர் வெளியிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து, லண்டன் பல்கலைக் கழகத்தில் உள்ள தி ஸ்கூல் ஓரியன்டர் அண்ட் ஆப்ரிகன் ஸ்டடீஸுக்கு நாளை செல்லும் முதலமைச்சர், சுமார் 30 தமிழ் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.
September 04, 2025 7:53 AM IST
லண்டன் ஆக்ஸ்போர்டில் பெரியாரின் உருவப்படத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்


