ஜெட்டா:
கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 15, 2026) சவூதி அரேபியாவின் கிங் அப்துல்அஜிஸ் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நடிகை நாடியா கெசுமா (50), மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டனுக்குச் செல்லும் வழியில் ஜெட்டாவில் டிரான்சிட் (Transit) செய்தபோது அவர் காணாமல் போனார். அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேறியதை குடிநுழைவுப் பதிவுகள் உறுதி செய்தன, ஆனால் 20 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்பு கொள்ள முடியாததால் அவர் ‘காணாமல் போனவர்’ என வகைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் ஜனவரி 15-ஆம் தேதி காலை 8.07 மணியளவில் (உள்ளூர் நேரம்) அவர் உயிரிழந்தார் என்று, அவரது கணவர் டத்தோஸ்ரீ முகமட் கமாருல் கபிலன் அப்துல்லாஹ் மற்றும் மகள் மைரா ஆகியோர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர் விமான நிலையத்திலிருந்து நேரடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், நேற்று இரவு 11.10 மணி வரை குடும்பத்தினருக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று அவரது மகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
அவர் 21 பேர் கொண்ட குழுவுடன் உம்ரா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கியிருந்தார்.
உயிரிழந்த நடிகையின் உடல் மலேசியாவிற்கு கொண்டு வரப்படாது என்றும், சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலேயே அடக்கம் செய்யப்படும் என்றும் அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
‘சைத்தான் முனாபிக்’ (Syaitan Munafik) மற்றும் ‘குடேட்டா’ (Kudeta) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அவர் மலேசியத் திரையுலகில் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியத் தூதரகம் மற்றும் சவூதி அரேபிய அதிகாரிகள் இந்த விவகாரத்தில் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.




