Last Updated:
ஒடிசா மாநிலத்தில் ED இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி தொழிலதிபரிடம் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற முயன்றபோது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஒடிசா மாநிலத்தில் அமலாக்கத்துறை இணை இயக்குநர் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து லஞ்சம் பெற முயன்றபோது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமலாக்கத் துறையின் இணை இயக்குநராக செயல்பட்டு வந்தவர் சிந்தன் ரகுவம்சி (chindan raguvamshi). இவர் சுரங்க நிறுவனர் ஒருவருக்கு எதிரான நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கை கையாண்டு வந்துள்ளார். இந்நிலையில், அந்த தொழிலதிபரை நேரடியாக சந்தித்த சிந்தன், அமலாக்கத்துறை நடவடிக்கையிலிருந்து விடுவிப்பதாகவும், அதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் தருமாறும் கேட்டுள்ளார்.
இந்நிலையில், லஞ்சம் வாங்குவதற்கு ஈடாக ED ஆல் தொடங்கப்பட்ட விசாரணை செயல்முறைகளை கையாளவோ அல்லது நீர்த்துப்போகச் செய்யவோ உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுத்தால் மேலும் சில சலுகைகள் வழங்கப்படும் என பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த தொழிலதிபருக்கு லஞ்சம் கொடுப்பதில் சற்றும் விருப்பம் இல்லை சிந்தன் ரகுவம்சியோ தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த பிரச்சினையிலிருந்து எப்படி வெளிவருவது என யோசித்த தொழிலதிபர் சிபிஐ-யிடம் இதுகுறித்து ரகசியமாக புகார் அளித்துள்ளார். அதன்பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகளை பொறிவைத்து பிடிக்க திட்டம் தீட்டினர். அதன்படி முதல்கட்டமாக 20 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி ஒரு ரகசிய இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். பணத்தை வாங்க வந்த ரகுவம்சியை மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அவரை புவனேஸ்வரில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். சிந்தன் ரகுவம்சி குறைந்தது 9 தொழிலதிபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்களிடமும் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளாரா? என்பது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஆனால், இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Odisha (Orissa)


