நடப்பு ஐபிஎல் சீசனின் 13-வது லீக் ஆட்டம் ஏப்ரல் 1-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் சொந்த மைதானமான லக்னோவில் நடைபெற்றது. ஆனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி. இது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆலோசகரான ஜாகீர் கானை எரிச்சலை அடையச் செய்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிட்ச் தயாரிப்பாளர் இங்கு வந்து பிட்ச்சை அவர்களுக்குச் சாதகமாக அமைத்தது போல் இருந்தது என்று ஜாகீர் கான் சாடியுள்ளார். இத்தனைக்கும் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் பஞ்சாப் கிங்ஸ் அணிதான் அதிகம் தங்கள் சொந்த மண்ணில் அதாவது மொஹாலியில் அதிகம் தோற்றுள்ளனர். ஆனால், அவர்கள் ஒருபோதும் பிட்சைக் குறை கூறியதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைந்திருக்கையில் ஸ்பின் பிட்ச் தேவை என்று லக்னோ கேட்டுள்ளனர். ஆனால், மாறாக பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டது பிட்ச். பஞ்சாப் கிங்ஸின் அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்கூசன், மார்க்கோ யான்சென் ஆகியோர் முழு ஓவர்கள் வீசப்பட, மார்க்கஸ் ஸ்டாய்னிஸின் 2 ஓவர்களையும் சேர்த்து 13 ஓவர்களில் 112 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டது லக்னோவின் வீழ்ச்சிக்குக் காரணமாகியுள்ளது.
“பிட்ச் தயாரிப்பாளர் என்ன சொல்கிறாரோ, அதன்படிதான் நாங்கள் எங்கள் உத்திகளை வகுப்போம். நான் தோல்விக்கு இதை ஒரு சாக்குப் போக்காகச் சொல்லவில்லை. கடந்த ஆண்டு கூட பேட்டர்கள் இங்கு தடுமாறவே செய்தனர். இவையெல்லாம் கிரிக்கெட்டின் போக்குகள் தான் என்பதை அறிவேன். ஆனால் இது எங்கள் ஹோம் கிரவுண்ட், ஆகவே அதற்கேற்ப பிட்சைக் கேட்பது எங்களுக்கான சலுகைகளைப் பெற உரிமை உண்டுதான். நிச்சயம் வெற்றிப்பாதைக்குத் திரும்புவோம். இருந்தாலும் பிட்சில் உள்ளூர் அணியின் சாதகங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்றார்.
ரிஷப் பந்த் தோல்விக்குப் பிறகு ‘ஸ்லோ பிட்சை எதிர்பார்த்தோம்’ என்றார். இந்தத் தொடரில் பிட்ச் பற்றிய விமர்சனத்தை வைக்கும் மூன்றாவது அணி லக்னோவாகும். இதற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தங்கள் பலம் ஸ்பின் எனவே ஸ்பின் பிட்ச் தேவை என்று கேட்டனர். அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் பலமான ஸ்பின் பிட்சைக் கோரி வருகின்றனர். 2 ஆண்டுகளாக எங்களால் சென்னை பிட்சையே புரிந்து கொள்ள முடியவில்லை என்று அவர்களும் வெறுப்பைத் தெரிவித்துள்ளனர்.