இராகவன் கருப்பையா – உலக பிரசித்திப் பெற்ற பிரிட்டிஷ் வாகனமான ‘ரோல்ஸ் ரோய்ஸ்'(Rolls Royce) ரக ஆடம்பரக் காருக்கு தலைநகர் செந்தூலில் உபரிபாகம் செய்யப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா?
நம் அனைவரையும் அதீத வியப்பில் ஆழ்த்தும் இந்த உண்மைத் தகவலை அவசியம் நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.
கடந்த 1957ஆம் ஆண்டிலிருந்து 1970ஆம் ஆண்டு வரையில் நம் நாட்டின் முதல் பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரஹ்மான் ஆட்சியின் போதுதான் இந்த பிரமிக்கத்தக்க அதிசயம் நிகழ்ந்துள்ளது.
செந்தூல் பகுதியில் கடந்த 1900ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட தொடர் வண்டிகளுக்கான ‘வர்க்க்ஷொப் ‘(workshop) இவ்வட்டாரத்திலேயே மிகப்பெரியதொரு ரயில் பழுது பார்க்கும் பட்டறையாக இருந்துள்ளது.
பல்வேறு பிரிவுகளைக் கொண்ட அப்பட்டறையில் அந்த காலக்கட்டத்திலேயே 2000திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துள்ளனர்.
அந்த எண்ணிக்கையில், கீழ் நிலை மட்டுமின்றி, திட்டமிடல், பொறியியல் மற்றும் நிர்வாகம் போன்ற அனைத்து நிலைகளிலும் நம் சமூகத்தைச் சார்ந்த ஏராளமானோர் அந்நிலையத்தின் செயல்பாட்டில் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய நிலையில் பொது மக்களின் போக்குவரத்துக்கும் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கும் பிரதானமாக விளங்கிய தொடர் வண்டிகளுக்குத் தேவையான அத்தனை உபரி பாகங்களையும் இந்த பட்டறையில்தான் வடிவமைத்து செய்திருக்கிறார்கள்.
மலேசியா சுதந்திரமடைந்த பிறகும் அதன் ரயில் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து முக்கிய பங்காற்றிய இந்தப் பட்டறையின் செயல் திறனை துங்கு அப்துல் ரஹ்மான் நன்கு அறிந்திருந்தார்.
அந்த காலக்கட்டத்தில் நாட்டின் முதல் பேரரசர் ‘லிமோஸின்’ எனப்படும் நீண்ட சொகுசுக் கார்கள் சிலவற்றை தன் வசம் வைத்திருந்தார்.
அவற்றில் ஒன்றான, பிரிட்டனில் செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ரோய்ஸ்’ ரகக் கார் பழுதடைந்த போது, அதற்கான உபரி பாகம் கிடைக்காததால் காரை பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் முடங்கின.
சம்பந்தப்பட்ட உபரி பாகத்தை பிரிட்டனிலிருந்து தருவிப்பதற்கு நீண்ட நாள்கள் ஆகும் என்பதால், நிலமையை உணர்ந்த பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், அந்த பாகத்தை இங்கேயே செய்யுமாறு செந்தூல் பட்டறையை கேட்டுக் கொண்டார்.
பேரரசரும் துங்கு அப்துல் ரஹ்மானும் மட்டுமின்றி நாடலாவிய நிலையில் பல்வேறு தரப்பினர் ‘முக்கின் மேல் விரல் வைக்கும்’ வகையில் சம்பந்தப்பட்ட அந்த உபரி பாகம் அசல் போல வடிவமைக்கப்பட்டு மிக விரைவிலேயே செய்யப்பட்டு பழுதடைந்த அந்த ‘ரோல்ஸ் ரோய்ஸ்’ காரில் பொருத்தப்பட்டது என்பது வரலாறு.
இந்தத் தகவல்களை சேகரித்து வெளியிட்டவர், செந்தூல் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்த குணா ராமச்சந்திரன் எனும் ஒரு பொறியியலாளர் ஆவார். அவருடைய தந்தையும் தாத்தாவும் கூட அந்த செந்தூல் பட்டறையில் பணி செய்துள்ளனர்.
அண்மையில் வெளியீடு கண்ட, ‘SENTUL GEMS – A hidden Treasure of the East,’ எனும் ஆங்கில வரலாற்று நூலில் இத்தகவல்களை அவர் பதிவு செய்துள்ளார். இந்நூல் முழுக்க முழுக்க செந்தூல் பட்டறையைப் பற்றியதாகும்.
இதற்கிடையே இந்த செந்தூல் பட்டறையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட, ‘முறுக்கு செய்யும் அச்சு’களும் கூட நிறைய பேர்களின் இல்லங்களில் இன்று வரையில் உள்ளது. தீபாவளி போன்ற விசேஷ தினங்களில் அவற்றின் பயன்பாட்டினைக் காணலாம்.
‘முறுக்கு அச்சு’ செய்வது செந்தூல் பட்டறையின் வேலையில்லை எனும் போதிலும், அங்கு பணியாற்றிய சில இந்திய ஊழியர்கள், பயன்பாட்டிற்கு தேவையற்ற, வீசப்பட வேண்டிய, அச்சு போன்ற வடிவமுடைய சிறிய சக்கரங்களை ‘முறுக்கு அச்சாக’ மாற்றியமைத்து சரித்திரம் படைத்தனர்.
நடப்பு சூழலில் நாட்டின் ரயில் சேவை காலத்திற்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த நூற்றாண்டில் காணப்பட்ட தொழில்நுட்பத் திறனை இப்போது பார்ப்பது அரிதாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.