எல்லாமே லெஸ் ஆகிக் கொண்டே வருவதுதான் டெக்னாலஜிபோல! வயர்லெஸ், ட்யூப்லெஸ், கார்ட்லெஸ், டிரைவர்லெஸ், கீலெஸ், நாய்ஸ்லெஸ்! இவை எல்லாம் ஓகே! வயர்லெஸ் சார்ஜர் வைத்து போன்களை வேண்டுமானால் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஆனால், வண்டிகளுக்கு! அதைப் பற்றித்தான் இந்த நியூஸ். வாகனங்களுக்கே இப்போது வயர்லெஸ் சார்ஜிங் வந்துவிட்டது என்றால், இது வேற லெவல்தானே! அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரத்தின் ஒரு சாலைதான் இந்த வயர்லெஸ் சார்ஜிங் பாயின்ட். இன்னொரு அடுத்த லெவல் என்னவென்றால், இங்கே வாகனங்களை நிறுத்தி சார்ஜ் ஏற்றத் தேவையில்லை; வண்டி போய்க் கொண்டிருக்கும்போதே சார்ஜ் ஏறும் என்பதுதான் சரியான ஹைலைட்!
வட அமெரிக்காவில் உள்ள டெட்ராய் நகரில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இப்படி ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த சார்ஜிங் டெக்னாலஜியைக் கண்டுபிடித்திருக்கும் நிறுவனத்தின் பெயர் Electreon. ஏற்கெனவே இந்த நிறுவனம் ஸ்வீடன், இஸ்ரேல் போன்ற ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் இப்படி வயர்லெஸ் சார்ஜிங் சாலையை நிறுவி அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டும் இருக்கிறது.
டெட்ராய்டில் இந்தச் சாலை ஒரு குவார்ட்டர் – மைல் தூரத்துக்கு நீளமான ஸ்ட்ரெட்ச். இந்தச் சாலையில் வாகனங்கள் ஓடும்போதே சார்ஜ் ஏறிக் கொள்ளும். கஷ்டமான தொழில்நுட்பம் இல்லை; ஆனால், ஸ்மார்ட்டான தொழில்நுட்பம். இந்தச் சாலைக் கட்டுமானத்துக்குப் பெயர் Asphalt. பார்ப்பதற்குச் சாதாரண சாலை போலத் தெரியும் இதற்குக் கீழே எலெக்ட்ரோ மேக்னட்டிக் காயில்களைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்தக் காயில்களுக்குப் பெயர் Magnetic Inductive Coils. இந்த Inductive காயில்களுக்கு ‘பவர் மேனேஜிங் ஹப்’கள் மூலம் ஃப்யூல் செய்கிறார்கள். இந்தக் காயில்கள்தான் எலெக்ட்ரோ மேக்னட்டிக் ஃபீல்டுகளைச் சாலைக்கு மேலே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் வாகனங்கள் பயணிக்கும்போது, சாலையில் உருவாகும் எலெக்ட்ரோ மேக்னட்டிக் ஃபீல்டுகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, சாலையில் உள்ள ரிசீவர் மூலம் நமது வாகனத்தின் பேட்டரிக்கு டிரான்ஸ்ஃபர் செய்கிறது. இண்டக்டிவ் காயில்கள் மூலம் இது நடைபெறுவதால், இந்த சிஸ்டத்துக்குப் பெயர் இண்டக்டிவ் சார்ஜிங் (Inductive Charging). இதுவும் அப்படியே மொபைல் போன்களுக்கான வயர்லெஸ் டெக்னாலஜிதான்.

அப்புறமென்ன, வண்டி ஓடினா எவ்வளவு சார்ஜ் இறங்குமோ… அதே அளவுக்கு நம் வாகனத்தின் பேட்டரியிலும் சார்ஜ் ஏறும் என்பதுதான் இதன் கான்செப்ட். ஆனால், இப்போதைக்கு குவார்ட்டர் மைல் தூரம்… அதாவது சுமார் 402 மீட்டர் வரைதான் இந்த ஸ்ட்ரெட்ச்சில் முடியும். எலெக்ட்ரிக் வாகனங்களில் இருக்கக் கூடிய Range Anxiety பிரச்னையை இதன் மூலம் கொஞ்சமாச்சும் முடிவுக்குக் கொண்டு வரலாம் என்பது உண்மைதான்.
இருந்தாலும், வயர்லெஸ் சார்ஜிங் ரோடுகள் கேட்க கூலாக இருந்தாலும், இதனால் ஆகும் பொருட்செலவும், கொஞ்சம் பிராக்டிக்கல் சிக்கலும் கொண்டது என்கிற வாதமும் போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு புது முயற்சினா சிக்கல் வர்றது சகஜம்தானே! இந்தியாவுக்கு இது வந்தா எப்படி இருக்கும் என்பதுதான் இப்போதைக்கு நமது சிந்தனை!