Last Updated:
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நேற்று தனது ஓய்வை அறிவித்தார். திடீரென அவர் வெளியிட்ட அந்த அறிவிப்பு, ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார்.
ஏபிபி செய்தியின் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா எப்போது வரை நன்றாக விளையாடுகிறார்களோ அதுவரை அவர்கள் இந்திய அணியில் இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
மேலும் அவர்கள் குறித்துப் பேசிய கவுதம் கம்பீர், “ஒரு பயிற்சியாளர் என்பவர் அணியைத் தேர்வு செய்ய மாட்டார். அது செலக்டர்களின் பணி. அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து யார் விளையாட வேண்டும் என்பதை பயிற்சியாளரும், அணியின் கேப்டனும் முடிவெடுப்பார்கள். இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது.
அவர்கள் (விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா) எப்போது வரை நன்றாக விளையாடுகிறார்களோ, அப்போது வரை அவர்கள் அணியில் இருக்கலாம். அவர்கள் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வேறு யாரும் அதை முடிவு செய்யக்கூடாது.
அவர்கள் நன்றாக விளையாடும் வரை அவர்கள் இந்திய அணியில் இருக்கலாம். பயிற்சியாளரோ, செலக்டர்களோ அல்லது பிசிசிஐ என யாரும் அதைக் கூறமுடியாது. அவர்கள் நன்றாக விளையாடினால், 40 வயது என்ன 45 வயதானாலும் கூட அவர்கள் விளையாடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வீரர்களுக்கான ஃபேர்வெல் குறித்துப் பேசும்போது, “எந்த வீரரும் ஃபேர்வெல் கொடுப்பதை நினைத்து விளையாடுவதில்லை. ஃபேர்வெலை விடவும், அவர்கள் முக்கிய நேரத்தில் அணிக்கு என்ன பங்களிப்பு செய்தார்கள் என்பதை நினைவில் கூறவேண்டும்.
ஒரு வீரருக்கு ஃபேர்வெல் அவ்வளவு முக்கியமல்ல. அணிக்கு அவர் கொடுத்த முக்கிய பங்களிப்பே அவருக்கு ஃபேர்வெல் தான். நாட்டு மக்களிடமிருந்து கிடைக்கும் அன்பை விடப் பெரிய ஃபேர்வெல் தேவையா? கிரிக்கெட் வீரர்கள் ஃபேர்வெல் போட்டிகளை நினைத்து கவலைப்படுவதில்லை” எனத் தெரிவித்தார்.
May 08, 2025 12:32 PM IST


