மும்பை இந்தியன்ஸ் அணி 5 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் நடப்பு ஐபிஎல் தொடரின் பார்ம் குறித்து பலருக்கும் விமர்சனம் எழுந்துள்ளது.
நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, 0, 8, 13, 17, 18, 28 என்று மோசமான ஸ்கோர்களுடன் தனது விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகிறார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, 26 ரன்கள் எடுத்த போது, பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
6 போட்டிகள் விளையாடி, 82 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள ரோகித் சர்மாவை ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்து வருகிறார்கள். ரோகித் சர்மா குறித்து பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ரோகித் மீது ரசிகர்கள் கொண்டுள்ள நற்பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம் எனக்கூறியுள்ளார்.
“கடந்த 10 வருடத்தில் ரோகித் சர்மா எடுத்த ரன்களை பார்த்தால், ஒருமுறை தான் அவர் 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அவர் 500 – 700 ரன்களை எடுக்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் அவர் நினைத்தால் அதை எடுக்க முடியும். அவர் இந்திய கேப்டனாக பொறுப்பேற்ற உடன், பவர்பிளேவில் தான் அதிக ரன்களை எடுக்கவேண்டும் எனக்கூறி விளையாடினார். ஆனால் நன்றாக ரன்கள் எடுக்கவில்லை என்றால் அவரின் நற்பெயர் தான் கெடும்.
அவர் ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஆனால் அதற்கு முன் அவரின் ரசிகர்கள் நினைவுக்கூரும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும். அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்ற எண்ணத்தை கொடுக்க கூடாது.
இதையும் படிக்க: Dream11-ல் ரூ.3 கோடி நீங்கள் பரிசாக வென்றால் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? உங்கள் கைக்கு எவ்வளவு கிடைக்கும்?
10 பந்துகள் அதிகமாக கூட விளையாடுங்கள். ஃபுல் ஷாட் மூலம் நீங்கள் அதிகமுறை உங்கள் விக்கெட்டுகளை இழக்கிறீர்கள். ஒரு இன்னிங்ஸ் முழுவதும் ஃபுல் ஷாட்டை விளையாட மாட்டேன் என அவர் நினைக்க வேண்டும். நான் இந்திய அணியில் விளையாடும்போது சச்சினோ, டிராவிடோ அல்லது கங்குலியோ என்னை நிதானமாக கிரிக்கெட் விளையாட சொல்வார்கள். அதுபோல இப்போது ரோகித் சர்மாவுக்கு யாராவது சொல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 40 ரன்களும், க்ளாசன் 37 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: ”கிரிக்கெட் வீரர்கள் எனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பினர்” – அனயா பரபரப்பு குற்றச்சாட்டு
இதையடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. வில் ஜாக்ஸ் அதிகபட்சமாக 36 ரன்களும், ரியான் ரிக்கில்டன் 31 ரன்களும் அடித்தனர். இந்த வெற்றியுடன் 6 புள்ளிகளைப் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 7-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Mumbai,Maharashtra
April 18, 2025 11:56 AM IST

