உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசோ கவுன்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஆண்ட்ரு பால்பிரினி மற்றும் கேப்டன் பவுல் ஸ்டிரிலிங் களம் இறங்கினர். ஆண்ட்ரு 5 ரன்னிலும், பவுல் 2 ரன்னிலும் வெளியேற 3 ஆவது களம் இறங்கிய விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஹேரி டெக்டர் 4 ரன்னம் கர்டிஸ் கேம்பர் 12 ரன்களும் எடுத்தனர். சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், அயர்லாந்து அணியால் ரன் குவிக்க முடியவில்லை.
16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து அணி 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக காரெத் டிலானி 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. 5 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 1 ரன் எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து இணைந்த கேப்டன் ரோஹித் – ரிஷப் பந்த் இணை, பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது.
52 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா தோள் பட்டையில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக வெளியேறினார். பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக அவர் வெளியேறிதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிஷப் பந்த் 36 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 2 ரன்களும் சேர்க்க 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்த இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.
.
&w=750&resize=750,375&ssl=1)
