Last Updated:
23 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3 சதம், 5 அரைசதங்களுடன் 1,175 ரன்கள் சேர்த்துள்ளார். அதேபோல 91விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் தரவரிசையில் அதிக நாட்கள் முதல் இடத்தில் இருக்கும் ஆல்ரவுண்டர் என்ற சாதனையை இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தொடர்கிறார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெஸ்ட் ஆல்ரவுண்டர்களில் முதலிடம் பிடித்த ரவீந்திர ஜடேஜா, அன்று முதல் இன்று வரை அதே இடத்திலேயே தொடர்கிறார்.
இந்த இடைப்பட்ட காலத்தில், 23 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3 சதம், 5 அரைசதங்களுடன் 1,175 ரன்கள் சேர்த்துள்ளார். அதேபோல 91 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள அவர், ஆறு முறை ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்களை சாய்த்து சாதனை படைத்துள்ளார்.
1,151 நாட்களாக தொடர்ந்து முதலிடத்தில் அவர் இருந்து வரும் நிலையில், அதிக நாட்கள் முதலிடத்தில் இருந்தவர் என்ற சாதனையும் அவர் வசம் உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆளுமை செலுத்தி வரும் அவர், ஐசிசி உலகளவில் தேர்ந்தெடுத்து வெளியிட்ட 2024ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
ஜடேஜா 400 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் வங்கதேச வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் உள்ளார். அவருடன் கிரிக்கெட்டிற்கு வந்த ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், ஜடேஜா இன்னும் நம்பர் 1 ஆல்ரவுண்டராக தொடர்வது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில், ஜடேஜா இடம்பெறுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். அதே நேரம், அவரது காலத்தில் கிரிக்கெட் விளையாட வந்தவர்கள் எல்லாம் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், எங்கே அவரும் ஓய்வை அறிவித்துவிடப்போகிறாரோ என்று பல ரசிகர்களும் வயிற்றில் நெருப்புடன் உள்ளனர்.
May 15, 2025 12:34 PM IST


