Last Updated:
கடந்த முறை ஜிதேஷ் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய ‘ஏ’ அணி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 148 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
வரவிருக்கும் ரைசிங் ஸ்டார் ஆசியக் கோப்பை’ (Rising Stars Asia Cup) கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய ‘ஏ’ (India A) அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) நடத்தும் இந்த வளர்ந்து வரும் வீரர்களுக்கான மெகா தொடர், வரும் நவம்பர் 19, 2026 அன்று கத்தார் நாட்டில் தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய இளையோர் அணிக்கு நட்சத்திர பேட்டர் திலக் வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வீரர் ரஜத் படிதார் அணியின் துணை கேப்டனாக (Vice-Captain) செயல்படவுள்ளார்.
அறிவிக்கப்பட்ட இந்த அணியில், தேசிய மூத்த அணியில் தங்களது திறமையை நிரூபித்த அபிஷேக் சர்மா, இளம் வயதிலேயே உலக அளவில் கவனம் ஈர்த்த வைபவ் சூர்யவன்ஷி, வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா மற்றும் பிரின்ஸ் யாதவ் போன்ற பல முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுடன் நடுவரிசையில் அதிரடி காட்ட அனுபவமிக்க டி20 வீரர் ரிங்கு சிங் மற்றும் விக்கெட் கீப்பர்களாக பிரபுசிம்ரன் சிங், குமார் குஷாக்ரா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ஆல்-ரவுண்டர் மற்றும் சுழற்பந்து வீச்சுத் துறையை பலப்படுத்த ஷாபாத் அகமது, பிப்ராஜ் நிகம், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியான் ஆகியோரும், பந்துவீச்சு வரிசையை வலுப்படுத்த அர்ஷாத் கான் போன்ற திறமையான வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இத்தொடரில் இந்திய அணி மிகக் கடினமான ஒரு பிரிவில் (Group) இடம்பெற்றுள்ளது. குரூப் சுற்றில் இந்தியா தனது முக்கியப் போட்டியாளரான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வதோடு, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய அணிகளுடனும் மோதுகிறது. ஒவ்வொரு குரூப்பிலும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இறுதிக்கட்டமான மகா இறுதிப் போட்டி வரும் நவம்பர் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த முறை ஜிதேஷ் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய ‘ஏ’ அணி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 148 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும், அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதன்பிறகு ஓமன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதிபெற்ற இந்தியா, வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சமனில் முடிந்ததை அடுத்து, சூப்பர் ஓவரில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. அந்தத் தொடரில் பாகிஸ்தான் ‘ஏ’ அணி கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


