டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், ரேபிடோ நிறுவனத்தின் பார்சல் டெலிவரி ரைடர் தனது ரூ.21,000 மதிப்புள்ள ஸ்பீக்கரை திருடியதாக குற்றம்சாட்டி, சமூக ஊடகங்களில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ள பதிவில், திருடப்பட்ட பொருளுக்காக ரேபிடோ நிறுவனம் ரூ.5,000 மட்டுமே இழப்பீடாக வழங்கியுள்ளது என்றும், இது மிகக் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.
லிங்க்ட்இன் தளத்தில் “ரேபிடோ ரைடரின் திருட்டு மற்றும் பொறுப்பில்லாத நடத்தை” என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட பதிவில், நவம்பர் 5 அன்று (#211793923) என்ற டெலிவரி ஐடியில் ரேபிடோ பார்சல் சேவையின் மூலம் தனது மார்ஷல் ஸ்பீக்கரை அனுப்பியதாகவும், அதை ரைடர் எடுத்துக்கொண்டு காணாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், “ரேபிடோ சப்போர்ட் குழுவை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்ட போது, அவர்களிடம் இருந்து மிகவும் தாமதமாகவே பதில் வந்தது. அவர்களால் தங்களது சேவைக்கான ஓட்டுநரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதை உறுதியாக கூறுவதற்கு 24 மணி நேரத்திற்கும் மேல் எடுத்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி சரிபார்ப்பில் தோல்வி?
பின்னர், இந்த சம்பவம் பற்றி அந்த பெண் முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்யும் போது, மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்துள்ளது. “டெலிவரிக்காக பயன்படுத்தப்பட்ட பைக், டெலிவரி பார்ட்னரின் பெயரில் பதிவு செய்யப்படாதது தெரிய வந்தது. இது ரேபிடோவின் பின்னணி சரிபார்ப்பு மற்றும் ஆன்போர்டிங் முறைகளில் மோசமான குறைபாடாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறைந்த அளவு இழப்பீடு
திருடப்பட்ட பொருளின் மதிப்புக்கு தகுந்த இழப்பீடு வழங்காத ரேபிடோ நிறுவனம், ரூ.5,000 மட்டும் வழங்கியதாகவும் அவர் கூறினார். “ரேபிடோ தங்களது விதிமுறைகளை கையில் வைத்துக் கொண்டு, பொறுப்பைத் தவிர்த்து, மிகக் குறைந்த அளவு இழப்பீட்டை மட்டும் அளித்தது” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எழுப்பிய கோரிக்கைகள்
மேலும் அவர், தனது பதிவில் கீழ்க்கண்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.
– திருடப்பட்ட பொருளுக்கான முழுமையான இழப்பீட்டை வழங்குதல்
– பின்னணி சரிபார்ப்பு முறைமையில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு பொது அறிக்கை வெளியிடுதல்
– ரேபிடோ மேலதிகாரிகளிடம் புகாரை நேரடியாக எடுத்துச் செல்லுதல் போன்றவையாகும்.
இதுபோன்ற, ரேபிடோவின் பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டிய அவர், “மற்ற பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பான சேவையை வழங்காவிட்டால், ரேபிடோ மூலம் பார்சல் அனுப்புவது மிகப்பெரிய அபாயமாக மாறும்” என்றும் எச்சரித்தார்.
ரேபிடோவின் பதில்
அவரது பதிவுக்கு பதிலளித்த ரேபிடோ குழு, “நீங்கள் விவரித்த சூழ்நிலையின் தீவிரத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இத்தகைய அனுபவம் எங்கள் சேவை தரத்துக்கு ஏற்றதல்ல. உங்கள் புகாரை விரைவாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தது.
மேலும், வாடிக்கையாளரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்துவதாகவும் உறுதியளித்தது.
November 24, 2025 10:25 AM IST
ரூ.21,000 மதிப்புடைய ஸ்பீக்கரை திருடிய டெலிவரி பார்ட்னர்… குறைந்த தொகையை இழப்பீடாக வழங்கிய ரேபிடோ

