Last Updated:
பாகிஸ்தானுக்கு ரூ.8,500 கோடி நிதி வழங்கிய ஐஎம்எஃப், இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துமா என உமர் அப்துல்லா அச்சம். இந்தியா கடும் எதிர்ப்பு, பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் என குற்றச்சாட்டு.
பாகிஸ்தானுக்கு ரூ.8,500 கோடி ரூபாய் நிதி வழங்க சர்வதேச நாணய நிதியகம் ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி வாங்கும் பாகிஸ்தான் அரசு, அதை மக்களுக்கு பயன்படுத்துமா? அல்லது இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
பாகிஸ்தான் தற்போது பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கி இருக்கின்றது. இந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக தங்களுக்கு கடன் வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தை பாகிஸ்தான் நாடியது. எனினும் இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் அரசு மக்களுக்கு நல்லது செய்வதற்காக நிதி வேண்டும் என்று வாங்கிவிட்டு, பின் அதனை தீவிரவாத முகாம்களை ஊக்குவிக்க தான் பயன்படுத்துகிறது என இந்தியா குற்றச்சாட்டி இருந்தது.
இது குறித்து ஐஎம்எஃப் கூட்டத்தில் பேசிய இந்தியா, “கடந்த 35 ஆண்டுகளில் இதுவரை 28 முறை பாகிஸ்தான் கடன் வாங்கி இருக்கிறது. ஆனால் இதில் ஒரு திட்டம் கூட மக்களுக்கு சென்று சேரவில்லை” என்று இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. ஐஎம்எஃப் நிதியை சரியாக பயன்படுத்த பாகிஸ்தானில் எந்த ஒரு அமைப்பும் இல்லை என்றும் இது மக்களுக்கு தான் சேருகிறதா என்று கண்காணிக்க கூட பாகிஸ்தானில் ஒரு குழு கூட இல்லை என்றும் இந்தியா குற்றச்சாட்டி இருந்தது.
மேலும் தற்போது பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிலவினாலும் ராணுவம் தான் ஆட்சியில் அதிகாரம் செலுத்துவதாகவும் ஐநா அளித்த ரிப்போர்ட்டை இந்தியா மேற்கோள் காட்டி இருக்கிறது. ஐஎம்எஃப்-யிடம் இருந்து நிதி வாங்கி பாகிஸ்தான் அரசு ராணுவத்திற்கும் தீவிரவாத ஊக்கத்திற்கும் செயல்படுத்துவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. மேலும் இதுபோன்ற பெரும் நிதியை பாகிஸ்தானை நம்பி வழங்கினால் அது ஐஎம்எஃப்க்கு தான் பெரிய பிரச்சனையை உருவாக்கும் என்றும் இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனினும் தங்களது நாட்டிற்கு இந்த நிதி மிகவும் தேவை என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவந்தது. இந்நிலையில் தங்களுக்கு உடனடியாக 8,500 கோடி ரூபாய் கடன் வழங்க ஐஎம்எஃப் ஒப்புதல் வழங்கி விட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளை ஊக்குவிப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு இவ்வளவு பெரிய நிதி கிடைத்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த பணத்தை வைத்துக்கொண்டு இந்தியாவிற்கு எதிரான போரில் பாகிஸ்தான் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதி, ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களுக்கு இந்தியா பதில் தாக்குதல் மட்டுமே நடத்தியதாகவும், பாகிஸ்தான் பயன்படுத்தும் ஆயுதங்களுக்கும் நிதி அளிக்க ஏன் சர்வதேச நிதியம் நினைக்கிறது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
ரூ.8,500 கோடி நிதி வாங்கிய பாகிஸ்தான்.. இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துமா? – அச்சம் கிளப்பிய உமர் அப்துல்லா!


