தமிழக அரசால் நெல் கொள்முதல் அதிகாரம் அளிக்கப்பட்ட தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு எந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதியும் இல்லை. அதனால் அது தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு என்ற தனியார் அமைப்புடன் உடன்பாடு செய்து கொண்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் ரூ.500 கோடிக்கு தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு நெல் கொள்முதல் செய்திருக்கிறது. அதன் பின் இரு மாதங்களாகியும் நெல்லுக்கான கொள்முதல் விலை உழவர்களுக்கு வழங்கப்படவில்லை. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் கடந்த 20ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்பட்டும் கூட, உழவர்களுக்கு நிலுவையை பெற்றுத் தர அரசு முன்வரவில்லை.

