
Last Updated:
“விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய சகோதர, சகோதரிகள் அனைவரையும் நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது.”
விவசாயிகளுக்கான பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PM Fasal Bima Yojana) மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீடு ஆகிய இரண்டு திட்டங்களை ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான முதல் அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு திட்டங்களான பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா மற்றும் வானிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கான காப்பீடு ஆகியவைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டம் அல்லது பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் என அழைக்கப்படும் இது, இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு விவசாயிகள் காப்பீடு பெறுவதை உறுதி செய்கிறது.
இந்த பயிர்க் காப்பீடு திட்டங்களுக்கு ஏறத்தாழ 69,515 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மையில் பயிர் சார்ந்த புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தனி நிதியம் தொடங்க 824 கோடியே 77 லட்ச ரூபாய் ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஒரு முறை சிறப்பு தொகுப்பு DIP உரத்திற்கான மானியத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 4 கோடி விவசாயிகள் பயன் பெறும் வகையில் இதற்காக ஏறத்தாழ 3,850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய அமைச்சரவை முடிவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய சகோதர, சகோதரிகள் அனைவரையும் நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது.
2025-ம் ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் விவசாயிகளின் வளத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 02, 2025 7:34 AM IST

