Last Updated:
தனது மகளின் திருமணத்தை மிகப்பெரிய தொகையை செலவு செய்து பிரம்மாண்டமாக நடத்திவிட்டு, வேறு ஒரு நிறுவனம் செலுத்த வேண்டிய தொகைக்கு உத்தரவாதம் அளித்து, பின்னர் திவாலான ஒரு கோடீஸ்வரர் பற்றி தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
மகளின் திருமணத்திற்கு ரூ.550 கோடி செலவு செய்தவரும், பின்னர் லண்டன் நீதிமன்றத்தால் திவாலானதாக அறிவிக்கப்பட்டு சிறைக்குச் சென்றவருமான ஒருவரைப் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி உள்ளிட்ட பிரபல இந்திய தொழிலதிபர்கள் இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் இந்தியாவை விட்டு வெளியேறி தலைமறைவாகினர், தங்கள் சொத்துக்களையும் இழந்தனர்.
இதேபோல், பல தொழிலதிபர்கள் கோடீஸ்வரர்களாக இருந்து, பின்னர் திவாலாகின்றனர். அந்த வகையில், தனது மகளின் திருமணத்தை மிகப்பெரிய தொகையை செலவு செய்து பிரம்மாண்டமாக நடத்திவிட்டு, வேறு ஒரு நிறுவனம் செலுத்த வேண்டிய தொகைக்கு உத்தரவாதம் அளித்து, பின்னர் திவாலான ஒரு கோடீஸ்வரர் பற்றி தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
முன்னதாக, உலக பணக்காரர் பட்டியலில் ஒருவராக இருந்த பிரமோத் மிட்டல் தற்போது லண்டன் நீதிமன்றத்தால் திவாலானதாக அறிவிக்கப்பட்டார். இவர், உலகின் மிகப்பெரிய எஃகு மற்றும் சுரங்க நிறுவனமான ஆர்செலர் மிட்டலை நடத்திவரும் இந்திய ஸ்டீல் மேக்னெட்டான லட்சுமி மிட்டலின் சகோதரர் ஆவார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை படி, லட்சுமி மிட்டல் 18.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர சொத்து மதிப்புடன் சுரங்க மற்றும் உலோகத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் மிகப்பெரிய இந்திய பணக்காரர்களில் ஒருவர் ஆவார்.
லட்சுமி மிட்டலின் சகோதரரான பிரமோத் மிட்டல், இஸ்பாட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (இப்போது ஜேஎஸ்டபிள்யூ இஸ்பாட் ஸ்டீல்) நிறுவனத்தின் தலைவராக இருந்தார். பிரமோத் ஒரு காலத்தில் உலகின் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. செலவு செய்வதற்கு பெயர் பெற்றவரும், 68 வயதானவருமான பிரமோத் மிட்டல், 2013ஆம் ஆண்டு தனது மகள் ஸ்ரிஷ்டியின் திருமணத்திற்காக சுமார் ரூ.550 கோடி செலவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், கடந்த 2020ஆம் ஆண்டு பிரமோத், லண்டன் நீதிமன்றத்தில் திவாலானதாக அறிவிக்கப்பட்டார். பிரமோத், ஜிஐகேஐஎல் (GIKIL) (குளோபல் இஸ்பாட் கோக்ஸ்னா இண்டஸ்ட்ரிஜா டூ லுகாவாக்) அதிகாரிகளுடன் சேர்ந்து, 2019ஆம் ஆண்டு போஸ்னியாவில் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
பிரமோத் ஒரு காலத்தில் போஸ்னிய கோக் உற்பத்தியாளரான ஜிஐகேஐஎல் (GIKIL)இன் கடன்களுக்கு உத்தரவாதம் அளிக்க ஒப்புக்கொண்டார். அவரது குளோபல் ஸ்டீல் ஹோல்டிங்ஸ், ஜிஐகேஐஎல் (GIKIL) இன் கடன்களுக்கு உத்தரவாதம் அளிக்க கையெழுத்திட்டது. இதனால் தான் பிரச்சனையில் சிக்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டார்.
இதையும் படிக்க: Gold price | இந்தியாவை விட குறைந்த விலையில் தங்கத்தை விற்கும் 9 நாடுகள் எவை தெரியுமா…? அங்கிருந்து எவ்வளவு தங்கம் எடுத்து வரலாம்?
ஜிஐகேஐஎல் (GIKIL) லண்டனில் உள்ள அதன் எஃகு வர்த்தக உத்தரவாத நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதுவே அவரது வாழ்க்கையை சிக்கலுக்கு உள்ளாக்கியது. அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரையில், பிரமோத் சங்கீதா மிட்டலை மணந்தார். இவர்களுக்கு வர்திகா, ஸ்ரிஷ்டி மற்றும் திவ்யேஷ் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
March 11, 2025 7:00 PM IST