மெஸ்ஸியின் கொல்கத்தா பயணம் சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், இந்த வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லால்பஜாரில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில், அர்ஜென்டினா ரசிகர் மன்றத்தின் தலைவர் உத்தம் சாகாவின் குற்றச்சாட்டுகள், கங்குலியின் நற்பெயருக்கு உண்மையான ஆதாரம் எதுவுமின்றி களங்கம் விளைவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி வருகை தந்த சால்ட் லேக் மைதான விவகாரத்தில், தனக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டிய உத்தம் சாகா மீது முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சௌரவ் கங்குலி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ₹50 கோடி நஷ்ட கேட்டுள்ளார் கங்குலி.
மெஸ்ஸியின் வருகைக்கு கங்குலிதான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும் அவருக்கும் இடையே இடைத்தரகராகச் செயல்பட்டதாக சாகா முன்னர் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடியாக, இந்தக் குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்று நஷ்டஈடு வழங்கக் கோரி சாகாவுக்கு கங்குலியின் சட்டக் குழு நோட்டீஸ் அனுப்பியது.
“எந்தவித ஆதாரமும் இன்றி வெளிப்படையாகக் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன,” எனத் தனது புகாரில் கங்குலி கூறியுள்ளர். மெஸ்ஸி மைதானத்திற்கு வந்திருந்த நேரத்தில்தான் கங்குலியும் அங்கு இருந்தார். ஆனால், பெரும் குழப்பம் நிலவியதால், அவர் வேறு ஒரு பகுதியில் தங்கியிருந்தார். நிலைமை மோசமானதைத் தொடர்ந்து ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
டெல்லியில் உரையாற்றிய லியோனல் மெஸ்ஸி, தனது இந்தியப் பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “இந்த நாட்களில் இந்தியாவில் எனக்குக் கிடைத்த அன்பிற்கும் பாசத்திற்கும் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டது ஒரு அழகான தருணம். இந்த வருகை சிறிய காலமாக இருந்தாலும், எனக்கு ஏற்கனவே இவ்வளவு அன்பு இருப்பது தெரியும், ஆனால் அதை நேரடியாகப் பெற்றது அற்புதமாக இருந்தது” என்று அவர்
குறிப்பிட்டார்.
மெஸ்ஸி தனது பேச்சில் மேலும், “இந்த நாட்களில் அவர்கள் எங்களுக்காகச் செய்த அனைத்தும் ஒரு வியக்கத்தக்க அனுபவம். அதனால், இந்த அன்பை எங்களுடன் எடுத்துச் செல்கிறோம். நாங்கள் நிச்சயமாகத் திரும்பி வருவோம், ஒருநாள் ஒரு போட்டியில் விளையாடலாம் அல்லது வேறு சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கு வருவோம். மிக்க நன்றி” என்று நிறைவு செய்தார்.




