2025-ம் ஆண்டு அட்சய திருதியையை முன்னிட்டு, பின்டெக் தளங்களான ஃபோன்பே மற்றும் ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி ஆகியவை டிஜிட்டல் தங்க கொள்முதல்களுக்கு பிரத்யேக சலுகைகளை அறிவித்துள்ளன. ஏப்ரல் 30-ம் தேதி மட்டுமே செல்லுபடியாகும் 24K டிஜிட்டல் தங்கத்தில் ரூ.2,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு முறை பரிவர்த்தனைகளுக்கு ஃபோன்பே 1% கேஷ்பேக்கை வழங்குகிறது. யூபிஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், ஃபோன்பே வாலட் மற்றும் பரிசு அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டண முறைகள் மூலம் இதை கொள்முதல் செய்யலாம்.
மேலும் Caratlane விற்பனை நிலையங்கள் அல்லது அதன் வலைதளத்தில் தங்கம் வாங்கும் பயனர்களுக்கு கூடுதல் தள்ளுபடிகளை ஃபோன்பே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தள்ளுபடிகளில் தங்க நாணயங்களுக்கு 2%, கற்கள் பதிக்கப்படாத நகைகளுக்கு 3% மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளுக்கு 5% ஆகியவை அடங்கும். இதில் ரூ.5 முதல் முதலீட்டை தொடங்கலாம். பயனர்கள் தங்கள் டிஜிட்டல் தங்கத்தை எந்த நேரத்திலும் விற்கலாம். அதற்கான தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இது நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதி இரண்டையும் வழங்குகிறது.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியும் இதேபோல் Safegold உடன் இணைந்து தனது டிஜிட்டல் கோல்டு சேவையை ஊக்குவிக்கிறது. இந்த சேவை ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் 24K 99.5% தூய தங்கத்தை வாங்க உதவுகிறது. பண்டிகைக் காலத்தில் பல்வேறு முதலீட்டு விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில், எஸ்ஐபி-கள் (SIP) மற்றும் டிஜிட்டல் தங்க நாணயங்களை வழங்குவதற்கான ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் உத்தியாக இந்த முயற்சி உள்ளது.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வாழ்க்கையில் செல்வம் பெருகும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், ஃபோன்பே மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி போன்ற நிறுவனங்கள் டிஜிட்டல் தங்க பரிவர்த்தனைகளை புதுமைப்படுத்தவும் ஊக்குவிக்கவும் இதை ஒரு சிறந்த வாய்ப்பாக கருதுகின்றன. வரலாற்று ரீதியாகவே, நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கம் பிரபலமான முதலீட்டுத் தேர்வாக இருந்து வருகிறது. ஆனால் நாம் தங்கத்தை நகைகளாகவே வாங்குகிறோம். இதனால் செய்கூலி, சேதாரம் என நிறைய செலவழிக்க வேண்டியுள்ளது.
மறுபுறம், தங்க இடிஎஃப் திட்டங்கள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் வசதியான ஆப்ஷனை வழங்குகிறது. தங்கத்தின் விலைகளை நீங்கள் தடையின்றிப் பெறுவது மட்டுமல்லாமல், இதில் கூடுதல் கட்டணங்களையும் சேமிக்கிறீர்கள். தங்கத்தின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த கூடுதல் வசதி தங்க நிதிகளில் முதலீடுகள் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
டிஜிட்டல் தங்கத்தின் நன்மைகள்
டிஜிட்டல் தங்கம் என்பது வெறுமனே ஆன்லைனில் தங்கம் வாங்குவது மட்டுமல்ல. ஒரு காலத்தில் செல்வந்தர்கள் மட்டுமே வாங்க முடிந்த தங்கத்தை எளிய முறையில் அணுகுவதற்கான வாய்ப்பை இது கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில், தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் பெரிய தொகைகள் தேவைபடும். இப்போது ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால், யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். உங்களிடம் ரூ.10 இருந்தாலும் கூட போதும்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 28, 2025 5:18 PM IST
ரூ.5க்கு தங்கம் வாங்கலாம்… அட்சய திருதியை முன்னிட்டு ஃபோன்பே, ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி அசத்தல் சலுகை!

