Last Updated:
பயிற்சியின்போது தனக்கு வெறும் பவுன்சர்களை மட்டுமே வீசி தனது தன்னம்பிக்கையை வேண்டுமென்றே வாசிம் அக்ரம் சீர்குலைத்ததாக முஸ்டாக் அகமது குற்றம் சாட்டியுள்ளார்.
35 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸுக்கு நோட்டீஸ் அனுப்பப் போவதாக பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரும் வங்கதேச அணியின் பயிற்சியாளருமான முஸ்டாக் அகமது அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக இந்த மூவரும் முன்பு ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளனர். அந்நாட்டு ரசிகர்களால் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் முஸ்டாக் அகமது ஆகியோர் மிகச் சிறந்த வீரர்களாக இன்றைக்கும் பாராட்டப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவதை முன்னிட்டு பாகிஸ்தானில் ‘ஸ்போர்ட்ஸ் சென்ட்ரல்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்டு வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் ஏராளமான கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தான் தேசிய அணிக்காக விளையாடிய போது வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸால் அவமதிக்கப்பட்டதாக முஸ்டாக் அகமது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பயிற்சியின்போது தனக்கு வெறும் பவுன்சர்களை மட்டுமே வீசி தனது தன்னம்பிக்கையை வேண்டுமென்றே வாசிம் அக்ரம் சீர்குலைத்ததாக முஸ்டாக் அகமது குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபோன்று செய்யாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக தான் மாறி இருப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதேபோன்று வக்கார் யூனுசும் தனது பேட்டிங் திறமையை சீர்குலைக்கும் விதமாக பயிற்சியின்போது பந்து வீசினார் என்று முஸ்டாக் அகமது கூறியுள்ளார். அந்த வகையில் இருவரிடமும் சுமார் 35 கோடி நஷ்ட ஈடு கேட்டு தான் வழக்கு தொடர போவதாக முஸ்டாக் அகமது தெரிவித்திருக்கிறார்.
இதற்கு வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் கிண்டலாக பதில் கொடுத்துள்ளார்கள். வாசிம் அக்ரம் கூறுகையில் முஸ்டாக் அகமதுவால் நைட் வாட்ச்மேன் ஆக கூட இருக்க முடியாது என்றும் டெஸ்ட் போட்டிகளில் அவரை நைட் வாட்ச்மேனாக அனுப்பினால் விரைவில் ஆட்டமிழந்து அணிக்கு இழப்பை ஏற்படுத்துவார் என்றும் அதனால் அவரை தான் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்வதாக வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
வக்கார் யூனிஸ், அவர் கேட்கும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்றும் தான் செய்த குற்றங்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கிண்டலாக கூறியுள்ளார். ஏற்கனவே முஸ்டாக் அகமது வெளியிட்ட வீடியோவும் சீரியஸாக இல்லாமல் கிண்டலாகத்தான் அமைந்திருந்தது. தற்போது இந்த மூவரின் கிண்டலான கருத்துக்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
March 01, 2025 7:41 PM IST


