
Last Updated:
2024 ஆம் ஆண்டில் பால் பண்ணைக்கு 1,01,915 லிட்டர் பால் வழங்கியுள்ளார். இதன் மூலம், அவர் 33 லட்சம் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளார்.
மண்டியா மாவட்டத்தின் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள டிங்கா கிராமத்தைச் சேர்ந்த 47 வயது பெண் விவசாயி மங்களம்மா பால் விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறார்.
மங்களம்மாவுக்கு 30க்கும் மேற்பட்ட பால் கறக்கும் பசுக்கள் உள்ளன, அதிலிருந்து அவர் 2024 ஆம் ஆண்டில் பால் பண்ணைக்கு 1,01,915 லிட்டர் பால் வழங்கியுள்ளார். இதன் மூலம், அவர் 33 லட்சம் வருமானம் ஈட்டி சாதனை படைத்தார். இதற்காக கடந்த ஜனவரி 11 சனிக்கிழமை பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மங்களம்மாவுக்கு ‘கர்நாடகாவின் சிறந்த பால் பண்ணையாளர்’ என்ற விருது வழங்கப்பட்டது.
இந்திய பால் பண்ணை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பால் பண்ணை உச்சி மாநாடு 2025 இல் இந்த விருது வழங்கப்பட்டது. மங்களம்மா எந்த முறையான கல்வியும் பெறவில்லை, இதனையடுத்து படிக்காதவராக இருந்தாலும் பால் பண்ணையில் லட்சக்கணக்கில் சம்பாதித்த விவசாயப் பெண்ணின் சாதனைகளை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் விவசாயப் பெண் மங்களம்மாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு, அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காசோலை வழங்கப்பட்டது. இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய மங்களம்மா, “இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு பசுக்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய பகுதியில் பால் பண்ணையைத் தொடங்கினோம். சிறந்த மகசூலைப் பெற பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கூடுதல் தகவல்களை பெற்று அதனை நடைமுறைப்படுத்தினேன்.
நானும், என் கணவரும் பால் வியாபாரம் செய்ய முடிவு செய்தோம். ஆரம்ப நாட்களில், முதலீடு செய்ய பணப் பற்றாக்குறை இருந்தது. ஆனால் இப்போது சிறந்த முறையில் பண்ணையை பராமரித்து வருகிறோம். மாடுகளுக்கு மக்காசோளம், நிலக்கடலை போன்ற சத்தான தீவனங்கள் ழங்குவதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டி வருகிறோம். இந்த தீவனங்களானது பசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதையும், நல்ல தரமான பால் உற்பத்தி செய்வதையும் உறுதி செய்கிறது. மாடுகளை முறையாக பராமரித்து, அவற்றிற்கு சத்தான தீபங்களை கொடுப்பதே எங்கள் வெற்றிக்கான முக்கிய காரணம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது பால் கறக்கும் இயந்திரங்கள் வாங்கி அதனை தற்போது பயன்படுத்தி வருகிறோம். இப்போது நாங்கள் ஒவ்வொரு நாளும் 300 லிட்டர் பால் விற்பனை செய்கிறோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மங்களம்மாவிடம் பசு மாடுகள் மட்டுமின்றி இரண்டு எருமை மாடுகளும் உள்ளது. பால் உற்பத்தி செய்து, மங்களம்மா அவரது கிராமத்தில் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளார். ‘கர்நாடகாவின் சிறந்த பால் பண்ணையாளர்’ என்ற விருது வாங்கியிருப்பது குறித்து பேசிய மங்களம்மா, இந்த விருது எங்களுக்கு உத்வேகம் தருவதாக கூறியுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
January 17, 2025 12:26 PM IST

