Last Updated:
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மதுரையில் மல்லிகை பூ விலை கிலோ 1700 முதல் 1800 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மழை காரணமாக கனகாம்பரம் மற்றும் பிற பூக்களின் வரத்து குறைந்து விலையும் அதிகரித்துள்ளது.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மதுரை மல்லிகை பூ உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
மதுரை மாநகரின் அடையாளமான மல்லிகைப்பூ, உசிலம்பட்டி, சத்திரப்பட்டி மற்றும் தென் மாவட்டங்களான தேனி, விருதுநகர், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பண்டிகை நாட்கள் மற்றும் வரத்துக்கேற்ப பூக்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது வழக்கம். தற்போது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மல்லிகை பூவின் விலை கிலோ 1700 முதல் 1800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிச்சி ரூ.1300, முல்லை ரூ.1200, செவ்வந்தி ரூ.350, சம்பங்கி ரூ.400, செண்டு மல்லி ரூ.90, கனகாம்பரம் ரூ.1500, ரோஸ் ரூ.400, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.450, கோழிக்கொண்டை ரூ.120, அரளி ரூ.450, மரிக்கொழுந்து ரூ.140 மற்றும் தாமரை ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் கனகாம்பரம் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கனகாம்பரம் மிகவும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதோடு, மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

