பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 1,700 ஆக அதிகரிப்பது தொடர்பில் தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுத்து உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
குறித்த சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக சில பெருந்தோட்ட கம்பனிகள் உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.
குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கிய உயர் நீதிமன்றம், அதற்கமைய அவ்வர்த்தமானியை அமுல்படுத்துவதற்கு இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 1,700 ஆக அதிகரிப்பை உறுதிப்படுத்தும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் (2385/14) கடந்த மே 21ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் உத்தரவுக்கமைய, அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த அதி விசேட அறிவித்தலுக்கமைய, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளம் ரூ. 1,350 ஆகவும் உற்பத்தித்திறன் அடிப்படையில் நாளாந்த விசேட கொடுப்பனவு ரூ. 350 ஆகவும் என, மொத்த நாளாந்த சம்பளம் ரூ. 1,700 அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ. 1700 ஆக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மே தினத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1,700 ஆக அதிகரிப்பு


