
டி.கே.ஜி. கபில
சுமார் ஒரு கோடியே முப்பத்திரண்டு லட்சம் ரூபாய் (ரூ. 13.2 மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற சீன நாட்டு வர்த்தகர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஜூன் 21 அன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘பச்சை வழிப்பாதை’ (Green Channel) வழியாக சுங்கப் பிரிவுக்கு எதையும் அறிவிக்காமல் வெளியேற முயன்றபோதே கைது செய்யப்பட்டார்.
இவர் சீனாவிலிருந்து தாய்லாந்தின் பேங்காக் நகருக்கு வந்து, அங்கிருந்து தாய் ஏர்வேஸ் (Thai Airways) நிறுவனத்தின் ‘டி.ஜி.-307’ (TG-307) எனும் விமானம் மூலம் ஜூன் 21 அன்று அதிகாலை 01:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பைகளை சோதனையிட்டதில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 88,000 சிகரெட்டுகள் அடங்கிய 440 சிகரெட் பெட்டிகள் (Cartons) மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சீனப் பிரஜையைத் தடுத்து வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

