அதாவது, இந்தியாவின் பிரபல கோடீஸ்வரர்களின் குழந்தைகள் மிகவும் எளிதாக பிரபலமாகி விடுகின்றனர். ஆனால், லட்சக்கணக்கான கோடிகள் சொத்து இருந்தாலும், இங்கு ஒருவர் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தனது சொந்த காலில் நின்று தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அவர் வேறுயாருமில்லை, தொலைத்தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமாக தடம் பதித்திருக்கும், பாரதி ஏர்டெல்லின் அதிபரும், நிறுவனருமான சுனில் மிட்டலின் மகள் ஈஷா பாரதி பஸ்ரிச்சா தான்.
பெரும்பாலான கோடீஸ்வரர்களின் வாரிசுகளைப் போலல்லாமல், ஈஷா ஒரு தனிப்பட்ட மற்றும் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புகிறார். ரூ.10.5 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள ஒரு சாம்ராஜ்யத்தின் வாரிசாக இருந்தபோதிலும், அவர் தனக்கென ஒரு தனித்துவமான பாதையை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஸ்காட்லாந்தில் பிறந்த ஈஷா, தனது ஆரம்ப காலத்தை ஸ்காட்டிஷ் மலைப்பகுதிகளில், தனது தாத்தா பாட்டியுடன் கழித்தார். மேலும், அவர் இங்கிலாந்தில் உள்ள மதிப்புமிக்க செல்டென்ஹாம் பெண்கள் கல்லூரியில் படிப்பை முடித்தார். பின்னர் பாத் பல்கலைக்கழகத்தில் அரசியல், இத்தாலியன் மற்றும் பிரெஞ்சு மொழிகளையும் பயின்றார்.
தற்போது ஈஷா, தன்னை ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் நிரூபித்திருக்கிறார். குறிப்பாக, ஃபேஷன் மற்றும் அழகு துறையில் இருக்கும் தனது ஆர்வத்தால், அழகுசாதனத் துறையில் முதலீடு செய்துள்ளார். அவரது நன்கு அறியப்பட்ட முதலீடுகளில் ஒன்று, கேட் மிடில்டன் மற்றும் மிஷல் ஒபாமா போன்றவர்களால் விரும்பப்படும் ஆடம்பர ஃபேஷன் பிராண்டான ரோக்சாண்டா என்பது குறிப்பிடத்தக்கது. வேகமாக வளர்ந்து வரும், லண்டனை தளமாகக் கொண்ட அழகு சேவையை வழங்கி வரும் தளமான பியூட்டிஸ்டாக்கையும் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். தொழிலை பொறுத்தவரை, அவரது அணுகுமுறை வழக்கமான குடும்பம் சார்ந்த முதலீடுகளிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டு இருக்கிறது. ஈஷாவின் முடிவுகள் அவரது தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் ஆர்வங்களால் எடுக்கப்படுகின்றன.
தி ஹாக்ஸ்டன் மற்றும் க்ளெனீகிள்ஸ் போன்ற ஆடம்பர ஹோட்டல் பிராண்டுகளுக்குப் பின்புலமாக இருக்கும் என்னிஸ்மோர் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷரன் பாஸ்ரிச்சாவை மணந்த ஈஷாவுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர், தற்போது இவர்கள் லண்டனில் வசித்து வருகிறார்கள். தனது வணிக நோக்கங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கல்வி மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு உதவும் வகையில், பாரதி அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவிலும் ஈஷா ஒருவராக இருக்கிறார். இவ்வாறாக, பிரபல கோடீஸ்வரர் சுனில் மிட்டலின் மகளாக இருந்தாலும், ஃபேஷனில் முன்னோக்கிச் செல்லும், மதிப்பு மிக்க மற்றும் சுதந்திரமான ஒருவராக ஈஷா பஸ்ரிச்சா தனித்து நிற்கிறார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 28, 2025 4:03 PM IST
ரூ.10.5 லட்சம் கோடி நிறுவனம் இருந்தும்.. தனது சொந்தக் காலில் நிற்கும் பிரபல கோடீஸ்வரரின் மகள் – யார் இந்த ஈஷா?

