Last Updated:
ராமமூர்த்தி தியாகராஜன், ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனர், மொபைல் போன் இல்லாமல் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். அவரது வெற்றியின் ரகசியம் என்ன?
இன்றைய காலத்தில் மொபைல் போன் இல்லாத நபர்களை பார்ப்பதே அரிது. வீட்டில் ஒரேவொரு தொலைபேசி இருந்த காலம் போய், இன்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தங்களுக்கு என்று பிரத்யேகமாக மொபைல் போன் பயன்படுத்தி வருகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பலருக்கும் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நிமிடத்தை கூட கடக்க முடியாது. இப்படியிருக்கும் சூழ்நிலையில், பல லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளர் சொந்தமாக மொபைல் போன் கூட இல்லாமல், மிகவும் எளிமையாக வாழ்ந்து வருவதை பார்க்கும் போது நம் அனைவருக்குமே ஆச்சரியமாக உள்ளது. யார் அந்த நபர்? அவரது தொழில் என்ன? விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவின் மிகப்பெரும் நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீராம் குழுமத்தை உருவாக்கியவரான ராமமூர்த்தி தியாகராஜன், வணிக உலகில் நன்கு அறியப்பட்ட நபராவார். இந்தியாவில் உள்ள மற்ற கோடீஸ்வரர்கள் எல்லாம் ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்தி வரும் நிலையில், ரூ.1,50,000 கோடி மதிப்புள்ள ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினாலும், எளிமையான வாழ்க்கையை பின்பற்றி வருகிறார் ராமமூர்த்தி தியாகராஜன்.
ராமமூர்த்தி தியாகராஜன் ஒரு வளமான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது வாழ்க்கை விடாமுயற்சி மற்றும் உறுதியான கல்வி அடித்தளத்துடன் தொடங்கியது. அவரது கல்விப் பின்னணியைப் பொறுத்தவரை, முதலில் சென்னையில் கணிதம் பயின்றார். பின்னர் கொல்கத்தாவில் உள்ள மதிப்புமிக்க இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் புள்ளியியல் படிப்பில் சேர்ந்து பட்டம் வாங்கினார்.
1961-ம் ஆண்டு, தியாகராஜன் இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். நிதித்துறையில் தனது இரண்டு தசாப்த கால வாழ்க்கையில் வைஸ்யா வங்கியிலும் மறுகாப்பீட்டு தரகரான ஜேபி போடா & கோ நிறுவனத்திலும் இவர் பணியாற்றியுள்ளார்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இவரிடம் சொந்தமாக மொபைல் போன் கிடையாது. ஏனென்றால் அதை அவர் ஒரு கவனச்சிதறலாகக் கருதுகிறார். அதேபோல் தனது செல்வச் செழிப்பை வெளிப்படுத்துவது போல் சொகுசு கார்களில் செல்லாமல், ரூ.6 லட்சம் மதிப்புள்ள ஒரு சாதாரண காரையே ஓட்டிச் செல்கிறார். மற்ற கோடீஸ்வரர்கள் போல் அல்லாமல் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார்.
வழக்கமான வங்கிகள் புறக்கணித்த குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குவதன் மூலம் தனது வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் தியாகராஜன். இதுவே ஸ்ரீராம் குழுமத்தின் வெற்றிக்கு மூலக்காரணமாக இருந்தது.
ஏ.வி.எஸ். ராஜா மற்றும் டி. ஜெயராமன் ஆகியோருடன் இணைந்து, தனது 37-வது வயதில் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தை தொடங்கினார் தியாகராஜன். வணிக வாகனக் கடன்கள் கொடுப்பதில் இவரது நிறுவனம் மிகுந்த நிபுணத்துவம் பெற்றுள்ளது. ஸ்ரீராம் குழுமத்தின் வலைத்தளத்தில் கூறியுள்ளபடி, இதன் வெற்றிக்கு அடிப்படையாக செயல்பட்ட வணிக யோசனை, பின்தங்கிய சமூகங்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கும் காரணமாக இருந்தது.
இன்று ஸ்ரீராம் நிறுவனம், 3600 கிளைகள், 70000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் 140000 முகவர்கள் மூலம் சுமார் 11 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. இன்று இதன் மொத்த மதிப்பு ரூ.150,000 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
March 17, 2025 7:54 PM IST
ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் நிறுவனர்… சொந்தமாக மொபைல் போன் கிடையாது.. யார் இவர்?


