புதுடெல்லி: குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் ஆலை அமைப்பதற்கான திட்டத்துக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் செமிகண்டக்டர் நிறுவனத்தைச் சேர்ந்த தலைவர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். நாம் புதிதாக ஒரு வரலாறை உருவாக்கி வருகிறோம். பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி ஒருவலுவான அடியை எடுத்து வைத்துள்ளோம். ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான 3 செமிகண்டக்டர் ஆலைகளை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சனந்த் மற்றும் தோலேரா ஆகிய 2 இடங்களிலும், அசாமில் மோரிகானிலும் என மொத்தம் 3 புதிய செமிகண்டக்டர் ஆலைகள் இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட உள்ளன. இனி, உலக வரைபடத்தில் அசாம் மாநிலத்துக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும். இந்த மூன்று ஆலைகளும் செயல்பாட்டுக்கு வரும்போது செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா உலகளவில் மிகப்பெரிய முனையமாக உருவெடுக்கும்.
21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் காலம். எனவே, செமிகண்டக்டர் இல்லாமல் அந்த உலகத்தை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. மின்னணு சிப்கள் வடிவமைப்பில் இந்தியா தற்சார்பு மற்றும் நவீனத்தை நோக்கி ஆற்றலுடன் முன்நகர்ந்து வருகிறது.
உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. தற்போது இந்தியாவும் அதில் ஒரு அங்கமாக இணைந்துள்ளது. இந்தியா உலகவல்லரசாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹார்டுவேர் உற்பத்தியிலும் நமது நிலையை வலுவாக்கிஉள்ளோம். மொபைல்போன் உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தகவல் தொடர்பு முதல் போக்குவரத்து வரை அனைத்துக்கும் செமிகண்டக்டர்தான் அடிப்படை ஆதாரம். உலக பொருளாதாரத்தில் இந்த தொழிலில் பல பில்லியன் டாலர் வருவாய் ஈட்ட வழி வகுத்துள்ளதுடன் பெருமளவில் வேலைவாய்ப்பையும் உருவாக்குகிறது.
மத்திய அரசின் ஆதரவால் ஸ்டார்ட்அப் துறையில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேபோன்று, செமிகண்டக்டர் துறையிலும் நமது வளர்ச்சி அமையும். இது, நமது இளம் தலைமுறையினருக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.