ரூ.1 கோடி ஹோம் லோனுக்கு ரூ.1 கோடி வட்டி! இந்த கணக்கு தெரிஞ்சா யாருமே தப்பு பண்ண மாட்டீங்க!
கையில் பணம் இல்லாமல் வீடு கட்ட ஆசைப்படுபவர்கள் முதலில் நாடுவது ஹோம் லோனைத் தான். லோன் பெறுவது ஒன்றும் அவ்வளவு சிரமமான விஷயம் அல்ல. அதுவும் நல்ல கிரெடிட் ஸ்கோர், நீங்கள் கேட்கும் தொகைக்கு ஏற்ற சம்பளம், எந்த வில்லங்கமும் இல்லாத சொத்து பத்திரம் இருந்தால் போதும். எளிதில் லோன் கிடைத்து விடும். இப்படி லோன் பெறும் பலர் EMI தொகையை மட்டும் பார்க்கின்றனர். லோன் முடிவில் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும், அதற்கு வட்டி எவ்வளவு? என்பதை எல்லாம் கவனிப்பதே இல்லை.உதாரணமாக ரூ.1 கோடி லோன் பெற்றால் அதற்கு ரூ.1 கோடி வட்டி செலுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?
செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரும், மேரி மைண்ட் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனருமான அரிஜித் சென் மாத EMI எவ்வளவு முக்கியமோ? அதே அளவுக்கு நீங்கள் இறுதியில் திருப்பி செலுத்தி இருக்கும் மொத்தத் தொகையும் முக்கியம் என்று குறிப்பிடுகிறார்.

அதாவது நீங்கள் கையில் வாங்கிய அசல் தொகை அளவுக்கு இறுதியில் வட்டி செலுத்தி இருந்தால் நிலைமையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் வீணாக வங்கிக்கு செல்லும். இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம்.
ஒருவர் ஆண்டுக்கு 8% வட்டி விகிதத்தில் 20 ஆண்டுகளுக்கு ஹோம் லோன் பெறுகிறார். இதற்கு மாத தவணையாக 83,600 ரூபாய் செலுத்தி வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 20 ஆண்டுகள் முடிவில் அந்த நபர் ரூ. 2.1 கோடியை வங்கிக்கு செலுத்தி இருப்பார். அதாவது வங்கியில் இருந்து பெற்ற ரூ.1 கோடி லோனுக்கு ரூ.1 கோடி வட்டியாக செலுத்தி இருப்பார். 8 சதவீத வட்டி விகிதத்திற்கே இப்படி என்றால்.. இன்னும் 10, 11, 13, 14 சதவீத வட்டி விகிதங்களில் எல்லாம் சில வங்கிகளில் லோன் கிடைக்கிறது. அங்கு லோன் பெறுபவர்களின் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள்.
வட்டியைக் குறைப்பது எப்படி?: கடன் காலத்தின் இறுதியில் நீங்கள் செலுத்தி இருக்கும் வட்டியைக் குறைக்க நினைத்தால் ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ-க்கு கூடுதலாக சிறு தொகையை வரவு வைக்கலாம். அதேபோல இடையில் கிடைக்கும் போனஸ் மற்றும் இதர தொகையை உடனே உங்கள் லோனில் வரவு வைப்பது வட்டியை குறைக்க உதவும்.
சிலர் மாதா மாதம் செலுத்தும் ஈஎம்ஐ குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக கடன் காலத்தை அதிகரிக்கின்றனர். உதாரணமாக 10 ஆண்டுகளில் செலுத்தி முடிக்க வேண்டிய கடனை 20 ஆண்டுகளாக மாற்றும்போது மாத தவணையை குறைத்து செலுத்தலாம். இதனால் மாதா மாதம் சிறு தொகை மிச்சமாகும். ஆனால் 20 ஆண்டுகளில் முடிவில் நீங்கள் கிட்டத்தட்ட இரட்டிப்பு வட்டியை செலுத்தி இருப்பீர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கூடுதல் ஈஎம்ஐ செலுத்தினாலே போதும் அல்லது மாதம் தோறும் இந்த தொகையை பிரித்து பிரித்து கூட செலுத்தலாம். இதனால் உங்களுடைய வட்டி குறைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே அதிக வட்டியில் ஹோம் லோன் செலுத்திக் கொண்டிருப்பவர்கள் அதைவிட குறைந்த வட்டியில் வேறு வங்கியில் லோன் கிடைத்தால் பேங்க் லோன் ட்ரான்ஸ்ஃபர் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.
அதாவது நீங்கள் ஏற்கனவே கடன் பெற்ற வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு கடனை மாற்றிக் கொள்ளலாம். புதிய வங்கியில் கிடைக்கும் லோனை வைத்து ஏற்கனவே பெற்ற லோனை அடைக்கலாம்.
அதேபோல முன்கூட்டியே கடனை முடிப்பதற்கு எவ்வளவு வரவு வைக்க முடியுமோ அதை வரவு வைத்துக் கொண்டே வரலாம். ஆனால் இதற்கு சில விதிகள் இருக்கிறது. அதுவும் நீங்கள் கடன் பெற்ற வங்கியை பொறுத்து மாறுபடும். சிலர் கடனை முன்கூட்டியே முடிப்பதற்கு ப்ரீ குலோசர் சார்ஜஸ் விதிக்கின்றன. எனவே கடன் பெறும்போதே இது போன்ற நிபந்தனைகளை எல்லாம் படித்துவிட்டு அக்ரிமெண்டில் கையெழுத்து போடுங்கள்.
