Last Updated:
இன்று 2 ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த போது கில் 147 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 130 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சீனியர் வீரர் கே எல் ராகுல் அவரை கையெடுத்து கும்பிட்டு வரவேற்றது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று லீசில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். 78 பந்துகளை எதிர்கொண்ட கே.எல். ராகுல் 8 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்து வெளியேறினார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 159 பந்துகளில் 16 பவுண்டரி ஒரு சிக்சருடன் சதம் அடித்து 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தமிழக வீரர் சாய் சுதர்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க அடுத்து இணைந்த கேப்டன் சுப்பன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணை அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தது.
குறிப்பாக ரிஷப் பந்த் ஒரு நாள் போட்டி போல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 102 பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் பந்த் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். கேப்டன் கில் 16 பவுண்டரி ஒரு சிக்சருடன் 175 பந்துகளில் 127 ரன்கள் குவித்து பாராட்டுகளை பெற்றார்.
நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 359 ரன்கள் குவித்தது. நேற்றைக்கு 85 ஓவர்கள் வீசப்பட்டன. நீண்ட இடைவேளைக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு திரும்பியுள்ள ரிஷப் பந்த் நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது இந்திய அணி ரசிகர்களுக்கும் சக வீரர்களுக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் ட்ரெஸ்ஸிங் ரூம் திரும்பிய ரிஷப் பந்தை பார்த்து கே எல் ராகுல் கையெடுத்து கும்பிட்டு வரவேற்றார். இந்த வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இன்று 2 ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த போது கில் 147 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 130 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.
June 21, 2025 5:16 PM IST


