புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பொருளாதார நிபுணர் பூனம் குப்தாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த எம்.டி.பத்ராவின் பதவிக் காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அந்த பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்துவந்தது. இந்த நிலையில், நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச்சின் (என்சிஏஇஆர்) தலைமை இயக்குநராக பணியாற்றும் பூனம் குப்தாவை ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளாக இருக்கும். இருப்பினும், பூனம் குப்தா பதவியேற்கும் தேதி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
இந்தியாவின் பொருளாதார கொள்கை வகுப்பில் என்சிஏஇஆர்-ன் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. பொருளாதார நிபுணரான பூனம் குப்தா பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலிலும் உறுப்பினராவார்.
மேலும், என்சிஏஇஆர்-ல் சேருவதற்கு முன்பாக ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் முக்கிய பொறுப்பைகளையும் வகித்துள்ளார்.
அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலையில் பொருளாதாரத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை முடித்தவர் பூனம் குப்தா. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.