Last Updated:
டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்ச்சியில் ராவணனுடன் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிக்கப்படும் என ஸ்ரீ கேசவ் ராம் லீலா கமிட்டி அறிவித்துள்ளது.
டெல்லியில் வருடந்தோறும் நடைபெறும் ராம் லீலா நிகழ்ச்சியில் இந்த ஆண்டு, ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் உருவ பொம்மைகளுடன் சேர்த்து 30 அடி உயரமுள்ள கரப்பான் பூச்சி உருவ பொம்மையும் எரிக்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் வருடந்தோறும் நவராத்திரிக்கு அடுத்த நாளான விஜயதசமி அன்று ராம்லீலா கொண்டாட்டம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். பெரும் உருவங்களில் அரக்கர்களாக சித்தரிக்கப்படும் ராவணனின் உருவ பொம்மை தீயிட்டு கொளுத்தப்படும். அந்தவகையில் டெல்லி பிதம்பூராவில் இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டு அரக்கனாக சித்தரிக்கப்படும் ராவணனுடன், 30 அடி உயரம் கொண்ட கரப்பான் பூச்சி உருவ பொம்மையையும் எரிக்க இருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஒரு வழக்கு விசாரணையின் போது நாட்டின் இளைஞர்களை கரப்பான்பூச்சி மற்றும் ஒட்டுண்ணிகள் என விமர்சித்தார். இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்து அபிஜித் தீப்கே என்பவர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பை தொடங்கினார். பின்னர் தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கமும் கொடுத்தார். இருந்தாலும், இந்தியாவில் கரப்பான் பூச்சி ஜனதா தொடர்ந்து வலு பெற்றுவருகிறது.
முதலாவதாக நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேசிய தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று அன்றைய மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து அதில் வெற்றி கண்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு ராம்லீலா கொண்டாட்டத்தில் 30 அடி கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிக்கப்படும் எனும் அறிவிப்பு வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், இந்த ஆண்டு நிகழ்வை ஏற்பாடு செய்யும் ‘ஸ்ரீ கேசவ் ராம் லீலா கமிட்டி’, இந்த உருவ பொம்மை “அசுத்தம் மற்றும் அழுக்கை” குறிப்பதாகவும், ‘ஸ்வச்ச பாரத்’ (தூய்மையான இந்தியா) மற்றும் ‘ஸ்வச்ச டெல்லி’ (தூய்மையான டெல்லி) ஆகிய பிரச்சாரங்களின் கீழ் தூய்மையை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்துள்ளது.
பாஜக எம்எல்ஏ-வும், கமிட்டியின் தலைவருமான அசோக் கோயல், பிடிஐ (PTI) செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இந்த முடிவின் பின்னால் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், கரப்பான் பூச்சி உருவ பொம்மையை எரிப்பது, தீயவற்றின் மீது நன்மையின் வெற்றியை வலியுறுத்துவதோடு, தூய்மையைப் பேணுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என கோயல் தெரிவித்துள்ளார். ராம் லீலா நிகழ்ச்சியின் போது, ராவணனின் படையில் உள்ள ‘அசுரர்களில்’ ஒன்றாக இந்த பூச்சி சித்தரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


