முள்ளிவாய்க்கால் மண்ணில் சிந்திய இரத்தத்திலிருந்து உணர்வலைகளாக இளைஞர்கள் எழுந்து வருகிறார்கள் எனத் தமிழ்நாட்டின் சமூகநலத்துறை அமைச்சரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
ஈழத்தின் முன்னணி ராப் பாடகர்களில் ஒருவரான பாடகர் சங்கீர்ஷன் சிறிலங்கா அரசால் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையிலேயே அவர் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
திருவிழாக்கள்
இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், “தமிழீழத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் பொது விழாக்களில் தமிழ்த்தேசிய எழுச்சிப்பாடல்களைப் பாடி இளைஞர்களை அரசியல் படுத்தி வருபவர் சங்கீர்ஷன்.
தமிழீழத்தின் நம்பிக்கைக்குரிய ராப் பாடகர், இவர் பாடினால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அணிதிரள்கிறார்கள்.

இதைப் பொறுக்க முடியாத இலங்கை அரசு, பாடகர் சங்கீர்ஷனை யாழ்ப்பாணத்தில் வைத்துக்கைது செய்து பண்ணையடி சிறைச்சாலையில் அடைத்திருக்கிறது.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
முள்ளிவாய்க்கால் மண்
முள்ளிவாய்க்கால் மண்ணில் சிந்திய இரத்தத்திலிருந்து உணர்வலைகள் இளைஞர்களாய் எழுந்து வருகின்றன.
அப்படிப்பட்ட இளைஞன்தான் சங்கீர்ஷன்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறை இன்னும் தொடர்வதன் சாட்சியம்தான் சங்கீர்ஷனைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்திருப்பது.
இடதுசாரி அரசியலை முன்னெடுப்பதாகச் சொல்லி உலக அரங்கில் மக்களை ஏமாற்றி வரும் போக்கைத் தான் அநுர குமார திசாநாயக்க தலைமைத்துவத்திலான ஜே.வி.பி அரசு செய்து வருகிறது.
இனப்படுகொலை
தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சவின் தொடர் அரசாகத்தான் திசாநாயக்க அரசு செயல்படுகிறது என்பது அம்பலமாகியுள்ளது.
தமிழீழ இளைஞர்கள் இன்று தமிழீழ விடுதலைக்கான குரலாக எழுந்து வருவதை ஒடுக்கும் போக்கை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்.

தமிழீழ மக்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கருவியாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது.
தமிழீழ உணர்வோடு எழுச்சிப்பாடல்களைப் பாடி வரும் தம்பி சங்கீர்ஷன் மீதான கைது நடவடிக்கை அரச பயங்கரவாத செயலாகும்.
ஆகவே உடனடியாக தம்பி சங்கீர்ஷனை யாழ் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

