Last Updated:
ராணுவ வீரர்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ராணுவ வீரர்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய ராணுவ வீரர்கள் குறித்து ராகுல் காந்தி அவதூறான கருத்தை வெளிப்படுத்தியதாக, லக்னோ நீதிமன்றத்தில் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தொடர்ந்த வழக்கில், 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி, “அருணாச்சலப் பிரதேசத்தில் சீன வீரர்கள் இந்திய ராணுவ வீரர்களைத் தாக்குகிறார்கள்.
பாரத் ஜோடோ யாத்திரை குறித்தும், அசோக் கெஹ்லோட் மற்றும் சச்சின் பைலட் குறித்தும் மக்கள் கேட்பார்கள். ஆனால், சீனா 2,000 சதுர கி.மீ இந்திய பகுதியை கைப்பற்றியது, 20 இந்திய வீரர்களைக் கொன்றது மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் நமது வீரர்களைத் தாக்கியது பற்றி ஒரு கேள்விகூட கேட்க மாட்டார்கள்” எனப் பேசினார். இது ராணுவ வீரர்களை இழிவுபடுத்தும் பேச்சு என புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும், ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து, ராகுல் காந்தி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தது.
இதனையடுத்து, லக்னோ நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தொடரப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அதனைத் தொடர்ந்து நீதிபதி அறையில் ஜாமீன் தொடர்பான நடைமுறைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராகுல் காந்திக்கு இந்த வழக்கில் லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
Lucknow,Uttar Pradesh
July 15, 2025 7:32 PM IST
ராணுவ வீரர்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு; ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்


