Last Updated:
பஞ்சாப் மாநிலத்தில், 10 வயது சிறுவன் ஷ்ரவன் சிங் ராணுவ வீரர்களுக்கு தண்ணீர், பால், லஸ்ஸி வழங்கி தாகத்தை தீர்த்தார். மேஜர் ஜெனரல் ரஞ்சித் சிங் அவரை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.
காஷ்மீர், பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் மீது ராஜாங்க ரீதியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் பல மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
அதேசமயத்தில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்த 9 பயங்கரவாதி முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரு நாட்டு எல்லையில் கடுமையான பதற்றம் ஏற்பட துவங்கியது. மேலும், இந்த தொடர் மோதல் போராக மாறுமோ எனும் அச்சம் எழுந்த வேளையில், அமெரிக்காவின் தலையீட்டால் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதில், பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தாரா வாலி எனும் கிராமத்தில் ராணுவத்தினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டிருந்தனர். அப்படி குவிக்கப்பட்டிருந்த ராணுவத்தினருக்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சோனா சிங் என்பவரின் 10 வயது மகன் ஷ்ரவன் சிங் என்பவர் அவர்களுக்கு தினமும், பால், தண்ணீர், லஸ்ஸி உள்ளிட்டவற்றை வழங்கி ராணுவ வீரர்களின் தாகத்தை தீர்த்திருக்கிறார்.
இந்நிலையில், தற்போது அப்பகுதியில் பணியில் இருந்த மேஜர் ஜெனரல் ரஞ்சித் சிங், அச்சிறுவனை அழைத்து பாராட்டி அவருக்கு விருந்து அளித்து நினைவுப் பரிசு ஒன்றினையும் வழங்கியுள்ளார்.


