Last Updated:
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தலைமறைவு எனும் தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் முக்கிய பதிவை வெளியிட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் காஷ்மீரைச் சேர்ந்த ஒரு குதிரை ஓட்டி உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளும் ஒன்றன் மீது ஒன்று ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதில் மிகமுக்கியமானது, இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்திவைத்துள்ளது. அதேபோல், பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இது இரு முடிவுகளும் இரு நாடுகளில் உள்ளவர்கள் மத்தியிலும் பெரும் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு முன்பும், தாக்குதலுக்கு பின்பும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் தலைமறைவானார் என சொல்லப்பட்டுவருகிறது. சில தகவல்கள் அவர் பாகிஸ்தானின் ராவல்பாண்டி பங்கரில் ஒளிந்திருந்திருப்பதாகவும், சில தகவல்கள் அவர் நாட்டைவிட்டு ஓடிவிட்டதாகவும் தொடர்ந்து சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், இது குறித்து உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள் : ரயில்வேத் துறை தேர்வு; தாலி, பூணூலுக்கு தடை! கர்நாடகாவில் வெடித்த சர்ச்சை
இந்நிலையில், இப்படியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தப் புகைப்படத்தில், அந்நாட்டின் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி முனீர் ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். இந்தப் புகைப்படத்தை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் முகமது ஷெஹ்பாஸ் ஷெரீப், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் (NIM) மற்றும் PMA காகுலின் அதிகாரிகள், PMA காகுலில் 151வது நீண்ட பாடநெறியின் பட்டம் பெறும் அதிகாரிகளுடன் ஒரு குழு புகைப்படத்தில். ஏப்ரல் 26, 2025” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Prime Minister Muhammad Shehbaz Sharif, Chief of Army Staff General Syed Asim Munir (NIM) and officers of PMA Kakul in a group photo with the graduating officers of 151st Long Course at PMA Kakul, Abbottabad.
April 26, 2025. pic.twitter.com/HLmVg9nUwg
— Prime Minister’s Office (@PakPMO) April 27, 2025
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தலைமறைவு என தகவல்கள் பரவிய நிலையில், பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தை பகிர்ந்திருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.
April 28, 2025 7:08 PM IST