Last Updated:
மத்திய பிரதேச பாஜக அமைச்சர் கன்வர் விஜய் ஷா மீது, கலோனல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக, உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராணுவ அதிகாரி கலோனல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய பிரதேச பாஜக அமைச்சர் மீது உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரஷேன் சிந்து நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து கலோனல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வயோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர்.
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம், மன்பூர் பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மாநில பாஜக அமைச்சர் கன்வர் விஜய் ஷா, பஹல்காம் தாக்குதல் மூலம் நமது பெண்களை கைம்பெண்கள் ஆக்கியவர்களுக்கு பாடம் புகட்ட அவர்களது மதத்தை சேர்ந்த சகோதரியை இந்தியா அனுப்பியதாக பேசினார். மேலும், அவரது சில கருத்துக்கள் சர்ச்சையாகவும், ஆபாசமாகவும் இருந்த நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவர் தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார்.
அதேநேரம், அவதூறான, வகுப்புவாத மற்றும் பாலியல் ரீதியான கருத்துக்களை தெரிவித்த அமைச்சர் கன்வர் விஜய் ஷாக்கு கண்டனம் தெரிவித்த மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மோகன் யாதவ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, கன்வர் விஜய் ஷா மீது மூன்று பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராணுவ அதிகாரி கலோனல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து… பாஜக அமைச்சர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு


