Last Updated:
ராஜஸ்தானில் இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானியர்களின் அழுகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜெய்சால்மர் பகுதியில் பாகிஸ்தானியர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைவிட அங்கு எந்தத் தடயமும் இதுவரை கண்டறிய முடியாமல் இருப்பது மேலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜெய்சால்மர் பகுதியில் இந்திய எல்லையில் 10 முதல் 12 கி.மீ. உள்ளே உள்ள தனோட்டும் சாதேவாலா பகுதியில் ஒரு இளம் ஆணின் சடலமும், சிறுமியின் சடலமும் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்த காவல்துறையினரும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும், அந்த இரு அழுகிய உடல்களையும் மீட்டுள்ளனர். உடல்கள் கிடந்த இடத்தில், பாகிஸ்தான் நாட்டின் செல்போன் சிம் கார்டு மற்றும் பாகிஸ்தான் அடையாள அட்டையை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது அவர்கள் இருவரும் பாகிஸ்தானியர்கள் என்பதை உறுதி செய்துள்ளது.
அந்த அடையாள அட்டையின் மூலம், இறந்திருக்கும் ஆண் ரவி குமார் (20) என்பதும், பெண் சாந்தி பாய் (15) என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரின் உடல்களும் தற்போது ராம்கர் பிணவறையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் இதில் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இவர்கள் உடல் கிடந்த பகுதியில் இருந்து அந்த எல்லையோரம் முழுக்க ஆராய்ந்ததில், அங்கு காலடி தடம் கூட இல்லாமல் இருந்திருக்கிறது. எனவே இவர்கள் பாகிஸ்தானுக்குள் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்று பலியானார்களா அல்லது இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல முற்பட்டு பலியானார்களா, அல்லது கொலை செய்யப்பட்டு உடல்கள் வீசப்பட்டுள்ளதா என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த மரணம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கும்போது, அவர்கள் பசி மற்றும் தண்ணீர் தாகத்தால் உயிரிழந்திருக்கலாம். உடல்கள் இருக்கும் நிலையை பார்க்கும்போது ஒரு வாரத்திற்கு முன்பாக இறந்திருக்கலாம் என்கிறார்கள். ஆனால், பிரேதப் பரிசோதனை முடிந்து அறிக்கை வந்த பிறகு அவர்கள் மரணம் குறித்தான உண்மை தெரியவரும்.
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரின் உடல்கள் அதுவும் ஒரு இளம் ஆண் மற்றும் சிறுமியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
June 29, 2025 6:04 PM IST