Last Updated:
மத்தியப் பிரதேசம் முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங்கின் சகோதரர், ராகுல் காந்தியை முதிர்ச்சியற்றவர் என விமர்சித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங்கின் சகோதரர் லக்ஷ்மன் சிங், எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியை முதிர்ச்சியற்றவர் என விமர்சித்திருந்தார். இதனையடுத்து காங்கிரஸ் அவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜய் சிங்கின் சகோதரர் லக்ஷ்மன் சிங். 70 வயதான இவர், ஐந்து முறை மக்களவை உறுப்பினராகவும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர்.
1994ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக அவர் எம்.பி.யாகத் தேர்வானார். 2004ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் மீண்டும் 2013 பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். கடந்த 30 வருடத்தில் மட்டும் பல முறை கட்சி மாறிய வரலாறும் இவருக்கு உண்டு.
இவர் சமீபத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியையும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவையும், “முதிர்ச்சியற்றவர்கள்” என விமர்சித்திருந்தார். பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும், ராபர்ட் வதேரா ஆகியோரின் எதிர்வினை முதிர்ச்சியற்றது என விமர்சனம் செய்திருந்தார்.
இதேபோல், அமெரிக்க பயணத்தின் போது ராகுல் காந்தியின் விமர்சனங்கள் குறித்து லக்ஷ்மன் சிங் கேள்வி எழுப்பியிருந்தார். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது நாட்டை ஒருபோதும் விமர்சிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். “வெளிநாட்டில் இருக்கும்போது இந்தியாவை விமர்சிக்காதீர்கள். நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர். அடல் பிஹாரி வாஜ்பாய் கூட எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்தியாவை ஒருபோதும் விமர்சித்ததில்லை, வெளிநாட்டு மண்ணில் பேசும்போது அவர் எப்போதும் இந்தியாவைப் புகழ்ந்தார்” என்று லக்ஷ்மன் சிங் கூறியிருந்தார்.
இந்நிலையில், லக்ஷ்மன் சிங்கிற்கு மாநில காங்கிரஸ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதனைத் தொடர்ந்து, அவர் கட்சியில் இருந்து ஆறு வருடங்களுக்கு நீக்கப்படுவதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு செயலாளர் தாரிக் அன்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
June 11, 2025 4:50 PM IST
“ராகுல் முதிர்ச்சியற்றவர்…” கடுமையாகத் தாக்கிய காங். முன்னாள் எம்.பி.. தலைமை எடுத்த அதிரடி முடிவு


