Last Updated:
ராகுல் காந்தி 7 நாட்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
வாக்குத் திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்தி 7 நாட்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், முறையான வீடின்றி பாலங்களுக்கு அடியிலும், அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் வசிக்கும் மக்களையும் தேர்தல் ஆணையம் கைவிடுவதில்லை என்றும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் பூஜ்ஜியம் என இருப்பிட எண் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
வாக்குத் திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்புக் கோர வேண்டும் என தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் மூன்றாவது வாய்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார். மேலும், 7 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அர்த்தம் என்றும் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
முன்னதாக, நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். அரசியல் கட்சிகள் அளித்த புகாரிலேயே சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார். 2003க்கு முன்னர் முறையான இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் இல்லாததே ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அதிகரிக்க காரணம் என்றார். அனைத்துத் தரப்பு வாக்காளர்களுக்கும் எவ்விதப் பாகுபாடுமின்றி தேர்தல் ஆணையம் துணை நிற்கும் என்றார்.
Delhi,Delhi,Delhi
August 17, 2025 8:39 PM IST

