இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி உள்பட வருகிற மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை வியாழக்கிழமை ராகுல் காந்தி பட்டியிலிட்டுள்ளார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் காலியாக உள்ள 30 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தேர்வுக்கான வினா தாள்கள் கசிவது கட்டுப்படுத்தப்படும் எனவும் பாரத ஜோடா நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்ட ரீதியாக உறுதி செய்யப்படும், சுயாதீன மற்றும் ஆன்லைன் தளங்களுக்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சமுதாய பாதுகாப்பு அளிக்கப்படும், புத்தாக்கத் தொழில்களுக்கான முதலீடாக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் ஆகிய வாக்குறுதிகளை ராகுல் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசும்போது, “30 லட்சம் அரசு பணிகள் காலியாக உள்ளன. பாஜக அவற்றை நிரப்பவில்லை. ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிரப்புவதே காங்கிரஸின் முதன்மையான பணி” என தெரிவித்தார்.