டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர சட்ட மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர், “தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு இல்லை என்பதை முழு நாட்டிற்கும் காட்டும் அளவுக்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. இந்த ஆதாரத்தைக் கண்டுபிடிக்க நாங்கள் 6 மாதங்கள் இடைவிடாமல் உழைத்தோம். துளிகூட சந்தேகம் இல்லாமல், மக்களவைத் தேர்தல் எப்படி திருடப்பட்டது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி மோசடி நடந்தது என்பதை விரைவில் உங்களுக்கு நிரூபிக்க இருக்கிறோம்” என தேர்தல் ஆணையம் குறித்து பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடியபோது, ”அரசுக்கு எதிராகவும், வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் நீங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால், நாங்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வேண்டி வரும்” என அருண் ஜெட்லி எனக்கு மிரட்டல் விடுத்தார். அப்போது நான் அவரிடம், “நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை என நினைக்கிறேன்” என அவருக்கு பதில் அளித்தேன்” என பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன், ரோஹன் ஜெட்லி மறுப்பு தெரிவித்து, 2019ல் மறைந்த தன் தந்தை எப்படி 2020ல் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டம் குறித்து ராகுல் காந்திக்கு மிரட்டல் விடமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “வேளாண் சட்டம் தொடர்பாக எனது தந்தை, அவருக்கு மிரட்டல் விடுத்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவருக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
எனது தந்தை 2019ல் இயற்கை எய்தினார். வேளாண் சட்டங்கள் 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதைவிட முக்கியமான விஷயம், மாற்று கருத்து கொண்டவர்களை மிரட்டும் குணம் எனது தந்தைக்கு கிடையாது. எப்போதும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்ட அவர் ஒரு தீவிர ஜனநாயகவாதி. என் தந்தை வெளிப்படையான, சுதந்திரமான விவாதத்திற்கு எப்போதும் அழைப்புவிடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi now claims my late father, Arun Jaitley, threatened him over the farm laws.
Let me remind him, my father passed away in 2019. The farm laws were introduced in 2020. More importantly, it was not in my father’s nature to threaten anyone over an opposing view. He was a…
— Rohan Jaitley (@rohanjaitley) August 2, 2025
ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்பி அனுராக் தாக்கூர், “காங்கிரஸையும் பொய்களையும் பிரிக்க முடியாது. காங்கிரஸ் எப்போது பொய் பேசும் என்பது தான் ஒரே உண்மை. அனைத்து கட்சியினரிடமும் மரியாதையைப் பெற்றவர் அருண் ஜெட்லி.
அருண் ஜெட்லி மறைந்து ஒரு வருடம் கழித்துதான் வேளாண் சட்டங்கள் வந்தன. ராகுல் காந்தி பல நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகளை எதிர்கொள்கிறார்; அவர் பல சந்தர்ப்பங்களில் மன்னிப்பும் கேட்டுள்ளார். ராகுல் காந்தி அருண் ஜெட்லியின் குடும்பத்தினரிடமும், பாஜகவிடமும், நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
VIDEO | Delhi: On Rahul Gandhi’s ‘Arun Jaitley ji was sent to threaten me for opposing farm laws’ statement, BJP MP Anurag Thakur (@ianuragthakur) says, “Congress and lies can’t be separated. The only truth about Congress is that they always lie. Arjun Jaitley ji was a leader who… pic.twitter.com/UDHaBEyKJd
— Press Trust of India (@PTI_News) August 2, 2025
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். மத்திய அரசு 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிமுகம் செய்தது என்பது நினைவுகூரத்தக்கது.
August 02, 2025 3:59 PM IST
ராகுல் காந்திக்கு அருண் ஜெட்லி மிரட்டல் விடுத்தாரா? வேளாண் சட்டங்கள் அறிமுகமும் முன்னாள் அமைச்சரின் காலமும்!

