Last Updated:
ரஷ்யா ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 202 இந்தியர்களில் 26 பேர் உயிரிழந்தனர், 119 பேர் விடுவிக்கப்பட்டனர் என வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்தார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்களில் 26 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்ற இந்தியர்கள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டார்களா என்று காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் மாநிலங்களவையில் கேள்வியெழுப்பினர்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ராணுவத்தில் 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தில் இருந்து 119 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 பேரை முன்கூட்டியே விடுவிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களில் 26 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஏழு இந்தியர்களை காணவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், ரஷ்ய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான உதவிகள் தூதரகம் மூலம் செய்யப்படுவதாகவும் தேவைப்படுவோருக்கு விமான டிக்கெட் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுவதாகவும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் கூறியுள்ளார்.
Dec 19, 2025 12:25 PM IST


