Last Updated:
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கத் தரப்பில் இருந்து முழுமையான உறுதிமொழிகள் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளன.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100% வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் (Senate) புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ள நிலையிலும், அது இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையைப் பாதிக்காது என்று அரசு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருகட்சி எம்.பி-க்கள் குழுவினர் ஜூலை 14 அன்று ஒரு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி, ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் உலகின் டாப் 5 நாடுகள் மீது 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதால், இந்த மசோதா முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த மசோதா சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றிருந்தாலும், இது தற்போதைய இந்தியா – அமெரிக்கா இருதரப்பு வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு முடக்கத்தையும் ஏற்படுத்தாது என்று Moneycontrol செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மசோதா இரு நாடுகளின் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இல்லை. திட்டமிட்டபடி விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கத் தரப்பில் இருந்து முழுமையான உறுதிமொழிகள் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதமே இதற்கான ஒரு கட்டமைப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ரஷ்ய எண்ணெயுடன் தொடர்புடைய கூடுதல் 25% வர்த்தக வரிகள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வர்த்தகத் துறைச் செயலாளர் ராஜேஷ் அகர்வால், இருநாடுகளுக்கு இடையேயான கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகத் தயாராக உள்ளது என்றும், இரு தரப்பும் சரியான நேரம் மற்றும் வடிவத்தைத் தீர்மானித்தவுடன் இது அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இந்த வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டாலும், உற்பத்தித் துறையில் இந்தியாவுக்குப் போட்டியாக இருக்கும் வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா, மலேசியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளை விட இந்தியாவுக்குச் சாதகமான தெளிவான வரிச் சலுகைகளை அமெரிக்கா வழங்கும் வரை இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வராது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பான அமெரிக்காவின் உள்நாட்டு மசோதாக்கள் ஒருபுறம் இருந்தாலும், அது இந்தியாவின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தை நலன்களைப் பாதிக்காது என்பதை இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.


