Last Updated:
டொனால்ட் டிரம்ப் ஒப்புதலுடன், ரஷ்யா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, பிரேசில் மீது 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிடம் இருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் 2ஆவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதனை கண்டித்து இந்தியா மீதான வரியை 25 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது.
இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, பிரேசில் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை குடியரசுக் கட்சியின் லிண்ட்சே கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ரிச்சர்ட் ப்ளூமெண்டல் ஆகியோர் கொண்டு வந்துள்ளனர்.
இந்த மசோதாவிற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இருதரப்பிலிருந்தும் 80-க்கும் மேற்பட்ட செனட்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா அடுத்த வாரமே வாக்கெடுப்புக்கு வர வாய்ப்புள்ளது.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் ஜவுளி தயாரிப்பு நிறுவனங்கள், மருந்து, ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மட்டுமின்றி ஐடி உள்ளிட்ட சேவை வழங்கும் நிறுவனங்களும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.


