கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், மூத்த எதிர்க்கட்சித் தலைவரும் அம்மாநில முன்னாள் மந்திரி பெசாருமான ரயிஸ் யாத்திமிற்கு வழங்கப்பட்டிருந்த மாநில அரச பட்டங்களை நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் முனாவீர் உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
மாநிலச் செயலாளர் டத்தோ முகமத் ஜாஃபிர் இப்ராஹிம் இன்று (ஜூலை 30) வெளியிட்ட அறிக்கையில் இத்தகவலைத் உறுதிப்படுத்தினார்.
“நெகிரி செம்பிலான் அரச குடும்பத்தின் கண்ணியம், புனிதம் மற்றும் மகத்துவத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மாட்சிமை தங்கிய ஆட்சியாளரின் கட்டளைக்கிணங்க இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
இதில் டத்தோ ஸ்ரீ உத்தாமா (Dato’ Seri Utama) – 2001-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட Darjah Seri Utama Negeri Sembilan (S.P.N.S) பட்டம். , டத்தோ (Dato’) – 1979-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட Darjah Dato’ Setia Negeri Sembilan (D.S.N.S) பட்டம் போன்றவை அடங்கும்.
1978 முதல் 1982 வரை நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக பணியாற்றிய 84 வயதான ரயிஸ் யாத்திம், தற்போது பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் இணைந்துள்ள ‘பார்ட்டி வவாசன் நெகாரா’ கட்சியின் மாநில தலைவராக உள்ளார்.
அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸிற்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வந்ததன் விளைவாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது:
மேலும் நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸிற்குப் பதிலாக அவரது உறவினரான துங்கு நட்சருடீனை புதிய மன்னராக ரயிஸ் யாத்திம் ஏற்றுக்கொண்டதுடன், அவருக்கு ஆதரவு தெரிவித்ததும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
அத்தோடு மாநிலத்தின் பாரம்பரிய ‘உண்டாங்’ (Undang) எனப்படும் மாவட்டத் தலைவர்களுக்கு அரண்மனைப் பூசல்களின் போது ரகசியச் சட்ட ஆலோசகராகச் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள 16-ஆவது மாநிலத் தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் அரசியல் மற்றும் இன ரீதியான பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.



