Last Updated:
உத்தரப்பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் ரீல்ஸ் செய்த ரஞ்சித் சௌராசியா கைது. ரயில் தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ் செய்ததால் ரயில்வே துறையில் பரபரப்பு.
சமூக ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு ரீல்ஸை உருவாக்க இளைஞர்கள் ஆபத்தான செயல்களை செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது தங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றியோ அல்லது சக மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதில் ஒரு இளைஞன் ரயில் பாதையில் படுத்துக் கொண்டு ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் ஒரு ரயில் அவர் மேலே சென்றது, ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞனுக்கு எதுவும் நடக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டதை அடுத்து வேகமாக வைரலானது. ஆனால் அந்த ரீல்ஸ் வைரலாக மட்டும் போகவில்லை. விரைவில் அந்த ரீல்ஸை பதிவிட்ட ரஞ்சித் சௌராசியா கைது செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ரஞ்சித் தனது மொபைல் போனுடன் ரயில் பாதையில் படுத்துக் கிடப்பதைக் காணலாம். பின்னர் தூரத்திலிருந்து ஒரு ரயில் வருவதையும் காணலாம். ரயில் வந்ததும், அவர் ரயில் தண்டவாளத்தில் தலையை குனிந்து படுத்துக் கிடப்பதையும், தன்னுடைய மொபைல் போனை மட்டும் கையில் உயர்த்தியவாறு பிடித்துக் கொண்டும் இருப்பதையும் காணலாம். மேலும் அந்த வீடியோவில் ஷாருக்கானின் ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருந்ததையும் கேட்கலாம். முழு ரயில் கடந்து செல்லும் வரை அவர் தண்டவாளத்திலேயே படுத்துக் கிடக்கிறார். இறுதியாக ரயில் சென்ற பிறகு அவர் எழுந்திருப்பதையும் வீடியோ காட்டுகிறது. இத்துடன் வீடியோ முடிவடைகிறது.
இதையும் படியுங்கள் : துப்பாக்கிக் கொண்டு பயங்கரத்தை நிகழ்த்திய இருவர்.. முதல்வர் வீட்டின் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, ரயில்வே துறையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த இளைஞர் மீது அரசு ரயில்வே போலீசார் (GRP) அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இது குறித்து நடந்த விசாரணையில், ஹசன்கஞ்சில் உள்ள நியோதானி கிராமத்தில் வசிக்கும் ரஞ்சீத் சௌராசியா என அடையாளம் கண்டனர். இதனையடுத்து ரயில்வே நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ரஞ்சித் சௌராசியா கைது செய்யப்பட்டார்.
இந்த வைரல் வீடியோவானது உன்னாவில் உள்ள குசும்பி ரயில் நிலையம் அருகே எடுக்கப்பட்டது. அந்த வீடியோ ரஞ்சித்தின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், அது ஏற்கனவே பல்வேறு பிளாட்ஃபார்ம்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ வெளியானவுடன், ரயில் பாதையை தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டதாக ஜிஆர்பி இன்ஸ்பெக்டர் அரவிந்த் பாண்டே தெரிவித்தார். எதிர்காலத்தில், யாராவது ரயில் பாதையை மறிக்க முயன்றால், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
April 17, 2025 9:20 PM IST


