ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரத்தை உயர்த்தும் நோக்கில், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் லிமிடெட் (IRCTC) முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில்களில், பிராண்டட் உணவு மற்றும் உணவக பாணி மெனுவுடன் கூடிய உணவு சேவைகளை வழங்கும் ‘சோதனை அடிப்படையிலான முயற்சி’ (Proof of Concept – PoC) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த முயற்சியின் கீழ், தொழில்துறை சமையல் நிறுவனங்கள், பிரபல உணவகச் சங்கிலிகள் மற்றும் விமான உணவு வழங்குநர்கள் போன்ற உணவு நிறுவனங்கள் பயணிகளுக்கு உயர்தர, சுகாதாரமான மற்றும் புதுமையான உணவுகளை வழங்க ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ரயில்களில் உள்ள உணவு சேவைகளில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைக் கொண்டுவருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. இதன் மூலம், உணவு தயாரிப்பு மற்றும் உணவு பரிமாற்றம் ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு, முழுமையாக தரக் கட்டுப்பாட்டுடன் செயல்படும் ஒரு புதிய முறை நடைமுறைக்கு வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சில வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில், பல்வேறு ரயில்வே மண்டலங்களில் இந்த PoC திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா அந்தஸ்து பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனமான ஐஆர்சிடிசி, இந்திய ரயில்வே முழுவதும் தினமும் சுமார் 16.50 லட்சம் உணவுகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், பயணிகளுக்கான சேவைகளை தொடர்ந்து மேம்படுத்தும் நோக்கில், இந்த புதிய உணவு சோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில், உணவு சேவைகளின் தரத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி-சீதாமர்ஹி அம்ரித் பாரத் ரயிலில், மெஸ்ஸர்ஸ் டச் ஸ்டோன் ஃபவுன்டேஷன் (டெல்லி) உணவு சேவையை மேற்கொள்கிறது. அதேபோல், காசர்கோடு-திருவனந்தபுரம் மற்றும் மங்களூரு-திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில்களில் கேசினோ ஏர் கேட்டரர்ஸ் & ஃபிளைட் சர்வீசஸ் (CAFS) நிறுவனம் உணவுகளை வழங்கி வருகிறது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், பயணிகளுக்கு உள்ளூர் சுவைகள் அடங்கிய பல்வேறு வகையான, உணவகத் தரத்திலான விரிவான மெனுக்கள் வழங்கப்படுகின்றன. பயணத்தின்போது, உணவு அனுபவம் மேலும் திருப்திகரமாக அமையவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
December 13, 2025 5:52 PM IST

