ரயிலில் பெண்கள் பயணிக்கும் கம்பார்ட்மெண்டுக்குள் அத்துமீறி நுழையும் ஆண் பயணிகள் மீது ரயில்வே போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் கடந்த சில வாரங்களாக இந்த அதிரடி நடவடிக்கை நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள், லேடிஸ் பெட்டியில் பயணம் மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பொதுமக்கள் மிக அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்தாக ரயில்வே உள்ளது. இதேபோன்று நாட்டில் மிக அதிகமான ஊழியர்களைக் கொண்ட துறையாக ரயில்வே இருந்து வருகிறது.
பயணிகளுக்கு அவர்களது வசதிக்கு ஏற்ப கட்டணங்கள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் முதல் முதல் வகுப்பு ஏசி கோச் வரை என அனைத்தும் வசதிகளும் ரயிலில் கிடைக்கின்றன. இதனால் பொதுமக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயிலில் செல்ல முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
பெண்களின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் ரயில்களில் அவர்களுக்கென தனி பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தவறுதலாக ஆண்கள் சில நேரங்களில் ஏறுவது உண்டு. அதே நேரம் வேண்டுமென்று சில ஆண்கள் அத்துமீறி லேடிஸ் பெட்டிக்குள் நுழைந்து பயணம் செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த 1 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி லேடிஸ் கம்பார்ட்மென்டில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு அதில் இருக்கும் ஆண்கள் மீது ரூ.1000 வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. வட கிழக்கு ரயில்வே மண்டலத்தில் மட்டும் 615 ஆண்கள் மகளிர் பெட்டியில் பயணம் செய்ததாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நாட்டின் மற்ற பகுதிகளில் செயல்படும் ரயில்வே மண்டலங்களிலும் அதிரடி நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர். ரயில்வேயில் இந்த பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன. இந்த சோதனைகளின்போது மற்ற சில குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளார்கள்.
.
&w=750&resize=750,375&ssl=1)
