Last Updated:
ரயிலில் இடம் பிடிப்பதற்காக போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இரண்டு சகோதரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சமீபத்தில் கான்பூர் மாவட்டத்திலிருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த அம்ரபாலி எக்ஸ்பிரஸில் ஒரு தவறான வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வதந்தி அழைப்பைத் தொடர்ந்து, அம்ரபாலி எக்ஸ்பிரஸ் ரயிலானது கான்பூர் மத்திய நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் படை, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். விசாரணையில் இந்த அழைப்பு போலியானது என தெரியவந்தது. ஆனால், இந்த வதந்தி பயணிகளையும், காவல்துறையினரையும் பீதியடையச் செய்தது. இறுதியாக, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இரண்டு சகோதரர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தகவலின்படி, லூதியானாவில் மெக்கானிக்காக பணிபுரியும் தீபக் சவுகான் மற்றும் நொய்டாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் அவரது சகோதரர் அங்கித் ஆகியோர் சமீபத்தில் டெல்லியில் அமிர்தசரஸ் மற்றும் கதிஹார் இடையே ஓடும் அம்ரபாலி எக்ஸ்பிரஸில் ஏறினர். ஆனால், ஜெனரல் கம்பார்ட்மென்ட்டில் ஏறிய அவர்களுக்கு உட்கார சீட் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த ரயிலானது உத்தரப்பிரதேசத்தில் உள்ள எட்டாவாவை அடைந்தபோது, சகோதரர்கள் இருவரும் ஒரு சீட்டுக்காக சக பயணிகளுடன் சண்டையிட்டனர்.
இதனையடுத்து, தீபக் மற்றும் அங்கித் இருவரும் ரயிலில் பயணிகளைப் பயமுறுத்தி சீட்டைப் பெற ஒரு திட்டம் தீட்டினர். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரித்தனர். தகவல் கிடைத்ததையடுத்து, உடனடியாக ரயில்வே போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் கான்பூர் மத்திய நிலையத்தை அடைந்தனர். பின்னர் ரயில் நிறுத்தப்பட்டு அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர். ரயிலில் இருந்த அனைத்துப் பெட்டிகளும் 40 நிமிடங்கள் சோதனை செய்யப்பட்டன.
சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்காததால், ரயில் புறப்பட அனுமதிக்கப்பட்டது. ரயில் நிலையத்திற்கு ஏராளமான போலீசார் வந்தபோது, சகோதரர்கள் தீபக் மற்றும் அங்கித் பயந்து, தங்கள் போன்களை சுவிட்ச் ஆஃப் செய்தனர். மேலும், ரயிலில் ஏற வேண்டாம் என முடிவு செய்த சகோதரர்கள், கான்பூரில் உள்ள ஃபெய்த்ஃபுல் கஞ்சில் ஒளிந்து கொண்டனர். ஒருபக்கம் மிரட்டல் அழைப்பு குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், மறுபக்கம் அழைப்பு வந்த செல்போன் நம்பரை கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தனர்.
ஆனால், அவர்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. இதற்கிடையில் சமீபத்தில் அவர்கள் போன்களை ஆன் செய்தபோது போலீசார் அவர்களை அடையாளம் கண்டு, இருவரையும் கைது செய்தனர். சகோதரர்கள் இருவரும் உத்தரப்பிரதேசத்தின் கடம்பூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
சகோதரர்கள் தீபக் மற்றும் அங்கித் மீது உண்மையில் எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில்கொண்டு, பயங்கரவாத எதிர்ப்புப் படையும் அவர்களை விசாரித்து வருகிறது. ரயில் பயணிகள் எந்த சூழ்நிலையிலும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. இல்லையெனில், அவர்கள் கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்று காவல் உதவி ஆணையர் அகன்க்ஷா பாண்டே கூறியுள்ளார்.
October 21, 2025 9:43 PM IST