இராகவன் கருப்பையா – இந்தியர்களின் பிரச்சனைகளை இனி தாமே களமிறங்கி நேரடியாக கவனிக்கப் போவதாக அண்மையில் பிரதமர் அன்வார் செய்த அதிரடி அறிவிப்பு, எதிர்பாராத பல கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.
அப்படியென்றால் சமீப காலமாக மனிதவள அமைச்சர் ரமணன் மீது அவர் வைத்திருந்த அதீத நம்பிக்கை என்னவாயிற்று? அந்த நம்பிக்கை பிரதமருக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிட்டனவோ, என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர், சுங்ஙை பூலோ தொகுதியில் வெற்றி பெற்றது முதல், பிரதமரின் அபிமானத்திற்குரிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக ரமணன் வலம்வருகிறார் என்பது எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.
தலைநகர் ‘பத்து’ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் ஜொகூர், செகாமாட் தொகுதியின் யுனேஸ்வரன் ஆகிய இருவரும் துடிப்புமிக்க இளைஞர்கள் எனும் போதிலும் ரமணனுக்கு மட்டும்தான் பிரதமர் முக்கியத்துவம் கொடுத்தார்.
நாடாளுமன்றத்தை பொருத்த வரையில், இரண்டாவது தடவையாக ‘பத்து’ தொகுதியில் வெற்றிபெற்ற பிரபாகரன்தான் இம்முவரில் ‘சீனியர்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும் ரமணனுக்கு மட்டுமே அன்வார் முன்னுரிமை வழங்கி, அடுத்தடுத்து அவருக்கு பல பதவிகளைக் கொடுத்து, முழு அமைச்சர் வரையில் அவரை உயர்த்தினார்.
ரமணனோடு ஒப்பிடுகையில், பிரபாகரனும் யுனேஸ்வரனும் மக்களுக்காக எந்நேரத்திலும் களமிறங்கி சேவை செய்யக் கூடிய ஆற்றல் மிகுந்தவர்கள்.
இருந்த போதிலும் நம் சமூகத்திற்குத் தேவையான அனுகூலங்களில் பலவற்றை ரமணனின் மூலமாக வழங்க பிரதமர் முடிவெடுத்தார்.
ஆகக் கடைசியாக, பிரபாகரனின் தலைமையில் இயங்கிய, மலேசிய இந்தியர் சமூக உருமாற்றுப் பிரவான ‘மித்ரா’வை கூட ரமணன் அமைச்சராக உள்ள மனிதவளத் துறையின் கீழ் கொண்டு வந்தார் அன்வார்.
நிலைமை இவ்வாறு இருக்க, பிரதமர் எதிர்பார்த்த அளவுக்கு ரமணனின் மக்கள் பணி அமையவில்லை என்று நம்பப்படுகிறது. பி.கே.ஆர். கட்சிக்கான நம் சமூகத்தின் ஆதரவு கணிசமான அளவு சரிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.
‘நெருப்பு இல்லாமல் புகையாது அல்லவா! ரமணனிடம் முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டது தமக்கு எதிர்விளைவுகளைக் கொண்டு வந்திருப்பதாக அன்வார் எண்ணுவதைப் போல் தெரிகிறது.
அதனால்தான் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை இனிமேல் தாமே நேரடியாகக் களமிறங்கி கவனிக்கப் போவதாக பிரதமர் அறிவித்தார் என்று நம்பப்படுகிறது.
“அப்படியென்றால் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட ரமணன் இவ்வளவு நாள்களாக என்ன செய்து கொண்டிருந்தார்”, என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி எழுப்புவதிலும் நியாயம் உள்ளது.
‘மித்ரா’வில் இருந்து அவரை உடனே நீக்கிவிட்டு இந்திய விவகாரங்களை கவனிப்பதற்கு உயர்நிலை அமைச்சரவை குழ ஒன்றை அன்வார் அமைக்க வேண்டும் என சார்ல்ஸ் பரிந்துரை செய்துள்ளார்.
